5 பிப்ரவரி, 2011

கிட்டங்கி ஆற்றில் தோணி கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு

கல்முனை கிட்டங்கி ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் இருவரைக் காணவில்லை என சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். சேனைக்குடியிருப்பிலிருந்து சவளக்கடை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தோணி பலத்த காற்றின் காரணமாக கிட்டங்கி ஆற்றில் கவிழ்ந்துள்ளது. அதில் பயணித்த 06 பேரில் நால்வர் (04) தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும், ஏனைய இருவரைக் காணவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நாவிதன்வெளி மற்றும் அன்னமலைக் கிராமங்களைச் சேர்ந்த சதீஸ், கணேஸ் ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர்.

கல்முனை நகரையும், நாவிதன்வெளி குடியேற்ற கிராமங்களையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதியின் மேலாக 5 அடிக்கு மேலாக வெள்ளம் கடந்த சில நாட்களாக பாய்ந்து வருவதால் வீதிப் போக்குவரத்து முற்றாக தடைப் பட்டுள்ளதையடுத்து, வியாழக்கிழமை தொடக்கம் தோணியினூடாகவே மக்கள் பயணத்தை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இச்சம்பவத்தை யடுத்து நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம் கல்முனை மற்றும் சவளக்கடை பொலிஸாருக்கு இவ்வீதியூடாக சகல மார்க்க போக்குவரத்தையும் தடை செய்யுமாறு அறிவித்ததையடுத்து, கல்முனை மற்றும் சவளக்கடை பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக