5 பிப்ரவரி, 2011

இலங்கை அகதி தற்கொலை முயற்சி






தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு முகாமில் விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருந்துவந்த இலங்கை தமிழ் அகதி ஒருவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சென்னையில் இருக்கும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் நான்கு பேர் தம்மை விடுதலை செய்யக்கோரி நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

அவர்களில் ஒருவரான அமலன் என்பவர் வெள்ளிக்கிழமை காலை அதிகப்படியான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அதையடுத்து அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சையளித்து வருவதாகவும் அவரது வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு அவரை சந்திக்க தம்மை அதிகாரிகள் அனுமதித்ததாக தெரிவித்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, அமலனின் உடல் நிலை தற்போது சீரடைந்து வருவதாகவும், ஆனால் அமலனும் மற்ற மூன்று பேரும் விடுதலை கோரி தொடர்ந்தும் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் ராஜீவ் காந்தி தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தீவிர உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பதாலும், விடுதலைப்புலிகளுக்கு ஆயுத பாகங்கள், மற்றும் மருந்துப் பொருட்களை தமிழ்நாட்டிலிருந்து கடத்த முயன்றது உட்பட பல்வேறு வழக்குகள் இவர்களுக்கு எதிராக நிலுவையில் இருப்பதாலும் இவர்களை வெளியில் விடுவதை தமிழக காவல்துறையினர் எதிர்ப்பதாக கூறப்படுகிறது.

அதேவேளை இவர்களின் மீதான வழக்குகளில் நீதிமன்றத்தின் முறையான முன்-ஜாமீன் பெற்றிருப்பதாக கூறும் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி முன்-ஜாமீன் பெற்ற பிறகும் இவர்களை சிறையில் அடைத்துவைத்திருப்பது சட்டவிரோதம் என்று வாதாடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக