5 பிப்ரவரி, 2011

சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் பங்கேற்கவில்லை



கதிர்காமத்தில் நேற்று நடைபெற்ற 63ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் தி.மு.ஜயரட்ண உட்பட அமைச்சர்கள் சிலரும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை.

அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் இத்தேசிய நிகழ்வில் கலந்துகொள்ளாது புறக்கணித்திருந்தனர்.

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 63ஆம் சுதந்திர தின நிகழ்வு கதிர்காமம் புனித நகரில் நேற்று இடம்பெற்றன. கட்டியெழுப்பிய தேசத்தைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் சபாநாயகர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட வெளிநாட்டு பிரதி நிதிகளும் ராஜதந்திரிரிகளும் கலந்துகொண்டிருந்தனர். சம்பிரதாயப்படி சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் வருகையை அடுத்து பிரதமரின் வருகை இடம்பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பிரதமரே தனக்கு அடுத்ததாக வருகை தரும் ஜனாதிபதியை வரவேற்பதும் வழமையாகும். இருந்தபோதிலும் நேற்றைய நிகழ்வுக்கு பிரதமர் தி.மு. ஜயரட்ண வருகை தரவில்லை.

அதேநேரம் சிரேஷ்ட அமைச்சரும் முன்னாள் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, டியு குணசேகர, ஆறுமுகன் தொண்டமான், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம்ஜயந்த, எஸ்.பி. திஸாநாயக்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

அத்துடன், பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன், விதுர விக்ரமநாயக்க எம்.பி. உட்பட மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் சிலரும் இத் தேசிய நிகழ்வில் பங்கேற்கவில்லை.

இதேவேளை, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அவற்றின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக