5 பிப்ரவரி, 2011

நிபுணர் குழுவின் ஆரம்ப நடவடிக்கைகள் பூர்த்தியடையாத நிலையில் உள்ளன


இலங்கை விவகாரம் தொடர்பில் தன்னால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அதன் ஆரம்பக்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் தொடர்ந்தும் அது தொடர்பில் இலங்கையுடன் பேச்சு நடத்துவதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வைத்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு பான் கீ மூன் மேலும் கூறுகையில், நான் உங்கள் கவலையை பகிர்ந்து கொள்கிறேன். இலங்கை அரசாங்கம் ஒரு முடிவுக்கு வராமல் இருந்து வருவது என்னையும் கவலையடையச் செய்கின்றது. நான் இலங்கைக்கு இரு தடவைகள் விஜயம் செய்துள்ளேன்.

ஜனாதிபதியுடனும் இலங்கை அரச தலைவர்களுடனும் நான் மிகவும் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டேன்.

மிகவும் நீண்டதும், மிகவும் நெருக்கடி மிக்கதும், ஒருவகையில் குழப்பகரமானதுமான உரையாடல்களைத் தொடர்ந்து என்னால் நிபுணர்கள் குழுவொன்றை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை திருப்தியடையச் செய்ய முடிந்தது.

அந்தவகையில் நிபுணர்கள் குழுவின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியாதிருப்பது, தற்பொழுது தெரியவருகின்றது. அதனால் அவர்கள் தொடர்ந்தும் இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.

பொறுப்புடைமை என்று கூறும்போது, அது எங்கு எப்படி நடப்பினும் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிவதுடன் குற்றம் செய்தவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். அதுவே நீதியின் அடிப்படைத் தத்துவமாகும்.

சிலவேளைகளில் எவ்வாறு நீதி, அரசியல்பலம், அரசியல் ஸ்திரத்தன்மை என்பவற்றை கட்டியெழுப்புவது என்பது ஆச்சரியமாகவுள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை சில வேளைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது. இன்னும் அது நீதியோடு துணைபோகாத பட்சத்தில், அந்த அரசியல் ஸ்திரத்தன்மையினால் நிலைத்து நிற்க முடியாது.

அதேபோன்று அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத பட்சத்தில் நீதியை எம்மால் நிலைநாட்ட முடியாமல் போகலாம். அதனால் இதுவரை எமக்கு அதற்கான சந்தர்ப்பம் உள்ளது. எனவே, அரசியல் ஸ்திரத்தன்மையும் நீதியும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்துச் செல்ல முடியும்.

இலங்கையிலும் அதனை அடையவே முயன்று வருகிறேன் தொடர்ந்தும் அதனை அடைய முயலுவேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக