5 பிப்ரவரி, 2011

வவுனியாவில் கன மழை: ஏ-9 வீதியும் தடைப்பட்டது






வவுனியாவில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளம் காரணமாக 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்காக 40 தற்காலிக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

கொட்டும் மழையினால் கால்நடைகள் வவுனியாவிலும் செட்டிகுளத்திலும் இறக்க ஆரம்பித்துள்ளன. கடும்குளிர், உணவு இன்மையினால் மாடுகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில் செட்டிகுளம் பகுதியில் சண்முகபுரம், கந்தசாமி நகர் கிராமங்களிலிருந்து 250 பேர் இடம்பெயர்ந்து செட்டிகுளம் மகாவித்தியாலயத்திலும் தங்கியுள்ளனர்.

மெனிக்பாம் மீள்குடியேற்ற பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் செட்டிகுளம் கலாசார மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாண்டிக்குளம், திருநாவல்குளம், பண்டாரிகுளம், தோணிக்கல், பூந்தோட்டம், சிறிநகர், பட்டகாடு, நெளுக்குளம், சாம்பல்தோட்டம் பெரிதும் பாதிக்கப்பட்ட இடங்களாக அடையாளம் காணப்பட்டுள் ளன.

வவுனியாவின் அனைத்து குளங்களும் நிரம்பி வழிகின்றன. குளங்களுடைய நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது. பிரதேசங்கள் வெள்ளக் காடாகவே காட்சியளிக்கின்றன.

மதவாச்சிக்கும் – பூனாவைக்கும் இடையில் பிரதான வீதியில் 5 அடிக்கு மேல் வெள்ளம் பாய்வதினால், வவுனியாவிற்கும் – மதவாச்சிக்குமான தரை வழி பாதை (கண்டி வீதி) தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி புறப்பட்டு வந்த இரவு பஸ்கள் மதவாச்சியில் தரித்துள்ளன. இந்த பகுதியில் குளம் உடைப் பெடுத்ததினாலேயே இந்த வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் வவுனியாவிலிருந்து கொழும்பிற்கான புகையிரத சேவைகள் வழமைபோல் இடம்பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக