5 பிப்ரவரி, 2011

500 மீற்றர் நீளம்; 100 மீற்றர் அகலம்; 20 ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய மண்சரிவு * வலப்பனையில் மக்கள் வெளியேற்றம் * கால்நடைகள் உயிரிழப்பு மர்லின் மரிக்க

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பலப்பத்தன, தியனில்ல என்ற இடத்தில் சுமார் இருபது ஏக்கர் நிலப்பரப்பில், மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுகள் மற்றும் சேவை பிரிவு தலைவர் ஆர். எம். எஸ். பண்டார நேற்று தெரி வித்தார்.

500 மீற்றர் நீளமும், 100 மீற்றர் அகலமும் கொண்ட மண்சரிவினால் இரண்டு வீடுகள் மூடுண்டுள்ளதுடன், சுமார் ஐம்பது குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு ராகல சிங்கள மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருப்ப தாகவும் அவர் கூறினார். அதேநேரம், அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்குக் கனத்த மழை பெய்யக்கூடிய காலநிலை நிலவுவதால் நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும், பிரதேசவாசிகள் விழிப்பாக இருப்பதும் அவசியம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலைய நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கூறுகையில்,

தியனில்ல மண்சரிவில் சிக்குண்டு ஏழு மாடுகள் உயிரிழந்துள்ளன. இப்பகுதி யில் வசிக்கின்ற மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேநேரம், வலப்பனை மகாவெல என்ற இடத்திலும், வெவன்தோட்டத்திலுள்ள கரண்டியெல்ல என்ற இடத்திலும், கும்பல்கமுவவிலும் மண் சரிவு ஏற்படக் கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

கும்பல்கமுவ பகுதியில் வசித்து வந்த 19 குடும்பங்களும் மகாவெல பகுதியிலிருந்து 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மண் சரிவு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டி மாவட்ட அலுவலகப் பூகற்பவியலாளர் விஜேவிக்கிரம கூறினார்.

இதன் காரணத்தினால் மண் சரிவு தொடர்பான தகவல்களை 081-2575063 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறியத் தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக