26 பிப்ரவரி, 2011

வடக்கை அபிவிருத்தி செய்வதில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்பாடு ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் பாராட்டு

மோதல்கள் இடம்பெற்ற வடபகுதியில் உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தெற்காசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

ஐந்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு நேற்றைய தினம் கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தது. முன்னாள் மோதல் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாகச் சந்தித்து அவர்களின் நிலைப்பாடுகளைக் கேட்டறிந்துகொண்டதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜீன் லம்பெர்ட் கூறினார்.

வடபகுதியில் பாடசாலைகள், வீதிகள், நீர்விநியோகம், மின்விநியோகம், உள்ளிட்ட உட்கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமது இலங்கை விஜயத்தின்போது இலங்கை சபாநாயகர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், வடபகுதி அரசாங்க அதிபர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந் ததாகவும் அவர் தெரிவித்தார். வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளின் எதிர்காலத் திட்டங்களை உரிய தரப்பினரிடம் கேட்டறிந்து கொண்டதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்டதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் ஆரம்பித்திருக்கும் பேச்சுவார்த்தைகளைத் தாம் வரவேற்பதாகவும், இப்பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்று எட்டப்படவேண்டுமென்றும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜீன் லம்பெர்ட் மேலும் கூறினார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரும் கலந்துகொண்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக