26 பிப்ரவரி, 2011

அவசரகாலச்சட்டமானது கே.பி.க்கு எதிராக ஏன் பயன்படுத்தப்படவில்லை:

புலிச் சந்தேகநபர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டமானது கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதனுக்கு எதிராக ஏன் பயன்படுத்தப்படவில்லை. அவசரகாலச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் சிறையிலடைத்து வைக்கப்பட்டிருக்கும் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காமையானது மீண்டும் ஒரு பயங்கரவாதத்துக்கான வழியாகவே அமையும் என்று ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன சபையில் தெரிவித்தார்.

யுத்தம் இல்லை, பயங்கரவாதம் இல்லை. புலிகளும் இல்லை. அப்படியானால் அவசரகால சட்டம் மட்டும் எதற்காக என்று கேள்வியெழுப்பிய அவர் அனைத்து இன மக்களும் சகோதரத்துடனும் சமாதானத்துடனும் வாழ வேண்வும் என்று அரசு கூறுவது பேச்சளவில் மட்டுமேயொழிய நடைமுறையில் இல்லை. என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஜனநாயக தேசியக் கூட்டணியினால் கொண்டுவரப்பட்ட அவசரகாலச்சட்டம் தேவையற்றது என்பது தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்திலேயே ஜயலத் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகள் மீண்டும் இடம்பெறக் கூடாது என்று பிரதமர் கூறுகிறார். அதில் ஐக்கிய தேசியக் கட்சியாகிய நாம் இணங்குகின்றோம்.

இங்கு சில விடயங்கள் அரசுக்கு புலப்படாதிருக்கின்றது. இதனை வெளிப்படுத்த வேண்டியது எதிர்க்கட்சியான எமது பொறுப்பாகும். இன்று அவசரகாலச் சட்டம் அவசியம் தானா என்ற கேள்வியெழுந்திருக்கின்றது. அவசரகாலச் சட்டத்தின் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா? மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா? வடக்காக இருந்தாலும் தெற்காக இருந்தாலும் இந்த அவசரகாலச் சட்டத்தை மக்கள் விரும்புகின்றனரா? நாம் இதனைக் கூறுவதை அரசாங்கம் ஏன் வெறுப்புடன் நோக்க வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கு மக்களின் நிலைமைகள் சீர் செய்யப்பட்டுள்ளனவா?, பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளனவா? மக்களைப் பாதுகாப்பதற்கான நிலைமைகள் காணப்படுகின்றனவா? இன்று புலிப் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்கள் இல்லை.

அப்படியானால் இந்த அவசரகாலச் சட்டம் எதற்காக வேண்டும். இதனை நிறைவேற்றுவதால் அல்லது நடைமுறைப்படுத்துவதற்கு இருக்கின்ற தேவை என்ன? கே.பி. அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர். இவர் தொடர்பில் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளை எழுப்பியிருக்கின்றோம்.

புலி உறுப்பினர்கள் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அவசரகாலச் சட்டம் ஏன் குமரன் பத்மநாதன் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பது தான் எமது கேள்வியாகும். ஆயுதம் மீட்கப்படுவதாகவும் தேடுதல்களை நடத்துவதற்கும் இந்த அவசரகாலச் சட்டம் தேவைப்படுவதாக அரசாங்கம் காரணம் கூறுகின்றது. மேற்போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சாதாரணசட்டம் போதுமானதாக இல்லையா? சாதாரண சட்டங்களால் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதா என்று கேட்கிறோம்.

பிழை எங்கு இருக்கின்றது? வாக்குகள் எண்ணுகின்ற நிலையங்களில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் விலகிக்கொள்வார்களேயானால் அங்கு சட்டம் இருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தலின் போது இந்த நிலைமை கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்றது. அதன்போது நானும் தாக்கப்பட்டு அங்கிருந்து துரத்தப்பட்டேன். இவ்வாறான தேவைகளுக்குத்தான் அவசரகாலச் சட்டம் பாவிக்கப்படுகின்றது.

தற்போது அவசரகாலச் சட்டத்தைப் பாவித்தே மாநகர சபைகளுக்கான தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்திருக்கின்றது. ஆனால் அவசரகாலச் சட்டத்தினூடாக மக்களின் உரிமைகள் பறிக்கப்படவில்லை என்று கூறுகின்றார். ஆனால் இந்த தேர்தல்களை ஒத்திவைத்திருப்பதன்மூலம் மக்களின் வாக்குரிமை இந்த அவசரகாலச் சட்டத்தின் மூலம் பறிக்கப்பட்டுள்ளது.

இன்று வடக்கு பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி தனிக் கட்சியாக போட்டியிடுகின்றது. அங்கு எமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்தோம். ஆனால் வடக்கின் பெரும்பகுதிகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையும் இன்றி முல்லைத்தீவில் இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள அனைத்து மக்களும் இன்றுவரையில் முகாம்களிலேயே தங்கியுள்ளனர். இதனாலேயே இங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் பெரிதாக கூறிய விடயம் தான் வடக்கு மக்கள் அனைவரும் மீள் குடியமர்த்தப்பட்டுவிட்டனர் என்பதாகும். ஆனால் அவ்வாறு இல்லை. இதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த சிறிய தேர்தலினூடாக ஜனாதிபதியை மாற்ற முடியாது. அரசாங்கத்தை மாற்ற முடியாது, இது கிராமப்புறங்களை கட்டியெழுப்புவதற்கான தேர்தலாகும். இவ்வாறான தேர்தலை ஒரே தடவையில் நடத்துவதற்கு ஏன் அரசாங்கத்தினால் முடியாது இருக்கின்றது. அவசரகாலச் சட்டத்தைப் பாவித்து ஏன் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். அரசாங்கத்துக்கு முழுமையான அதிகாரங்கள் இருக்கின்ற நிலையில் ஏன் இவ்வாறு ஒத்திவைக்க வேண்டும். ஏன் முல்லைத்தீவின் அப்பாவி மக்களின் உரிமைகளைப் பறிக்கவேண்டும் என்று கேட்க விரும்புகிறேன்.

இன்று வடக்கில் இராணுவ நிர்வாகம் தேவையில்லை. அங்கு சிவில் நிர்வாகமே தேவையாக இருக்கின்றது. அனைத்து இனங்களும் சமத்துவமாக சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். அதுவே அரசாங்கத்தின் கொள்கை என்று பிரறதமர் கூறுகின்றார். இதனை நாம் முழுமையாக விரும்புகின்றோம். ஆனால் வடக்கில் இன்று ஜனநாயகம் இல்லை.

சிறுவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. புலி சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டம் செயற்படுவதில்லை. குற்றம் இழைத்திருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் தவறே இல்லை. ஆனால் அவசரகாலச் சட்டத்தை பாவித்து அவர்களை சட்டத்துக்குள் நிறுத்தாது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை மீண்டும் ஒரு பயங்கரவாதத்துக்கு வழிவகுக்கும். நான் இவ்வாறு பேசுவதால் என் மீது புலி முத்திரை குத்தப்படலாம். அது பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில் மனித உரிமைகளுக்காக என்றும் குரல் கொடுப்பேன். அரசாங்கம் கூறுவதெல்லாம் பேச்சளவிலேயே இருக்கின்றன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக