26 பிப்ரவரி, 2011

வடக்கு, கிழக்கில் மக்கள் மத்தியில் பீதி அவசரகால சட்டத்தை நீக்குவது அவசியம்: அநுரகுமார திசாநாயக்க

வடக்கில் இடம்பெறும் செயற்பாடுகள் ஜேர்மனி நாசி இராணுவத்தின் செயற்பாட்டை விடவும் மோசமானவையாகும். அங்கு குடும்பத்துடன் படையினர் புகைப்படம் எடுத்து வீடுகளில் மாட்டி வைத்து படத்தில் இருப்பவர்களை விட கூடுதலாக இருப்போரை கைது செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறை அந்த மக்களை மிகமோசமான நிலைக்கு தள்ளி விடும் என்று ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்குவது ஆபத்தானது. அவசரகாலச்சட்டம் பாராளுமன்ற பிரதிநிதிகளின் பின்னால் வருவதற்கு முன்னர் அவற்றை நீக்குவதற்கு தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், யுத்தம் நிறைவடைந்து 20 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் நாட்டை சாதாரண சட்டத்தின் கீழ் நிர்வகிக்காமல் தொடர்ந்து அவசரகாலச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்க வேண்டிய தேவை என்ன?

இலங்கையிலும் உலகத்திலும், அரசாங்கத்திற்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு இராணுவச் செயற்பாடு, மனிதனால் இன்றேல் இயற்கையான முறைமையில் தொற்றுகின்ற தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு, சிவில் குழப்பங்களை கட்டுப்படுத்தல், பொருளாதார நெருக்கடி மற்றும் வேøலநிறுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தல் ஆகிய நான்கு காரணங்களை அடிப்படையாக கொண்டே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகிறது.

கடந்த நான்கு வருடங்களாக யுத்தத்தை காரணம் காட்டி அதனை அடிப்படையாக கொண்டு பாதுகாப்பு அமைச்சருக்காக பிரதமர் ஒவ்வொரு மாதமும் அவசரகாலச்சட்டத்தை நீடித்துக் கொள்வதற்கு சபையின் அனுமதியை கோரிநின்று அறிக்கையும் சமர்ப்பித்து இழப்பீடுகள், மீட்கப்பட்ட., கைப்பற்றப்பட்ட விபரங்களுடன் புள்ளி விபரங்களையும் சமர்ப்பிப்பார்.

1948 ஆம் ஆண்டிற்கு பின்னர் 1953 ஆம் ஆண்டில் ஹர்த்தால், 1958 இல் சிவில் குழுப்பங்கள், 1959 இல் பண்டாரநாயக்க படுகொலை, 1980 இல் ஐ.தே.க.வின் வேலைநிறுத்தம் இவற்றை அடிப்படையாக வைத்துகொண்டே அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போதெல்லாம் மேலே கூறப்பட்ட நான்கு காரணங்களும் முன்வைக்கப்பட்டன.

சிவில் குழப்பங்கள், அராஜகம், இயற்கை அனர்த்தங்கள் இல்லையென்றால் தொடர்ந்து அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது ஏன்? நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் இந்தச் சட்டத்தை நீடிக்கின்றதா? இல்லை. மாறாக அரசாங்கம் தனது அரசியலை முன்வைக்கவும் எதிர்மறையான அரசியலில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தவுமே இந்த சட்டத்தை பயன்படுத்துகின்றது. இது யோக்கியமானது அல்ல.

சாதாரண சட்டத்தின் கீழ் சாட்சி நீதிவான் நீதிமன்ற நீதிவானின் முன்னிலையிலேயே சாட்சியளிப்பார். ஆனால், அவசரசாலச் சட்டத்தின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் முன்னிலையிலேயே சாட்சியம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. நபர்களை கைது செய்வதற்கும் அரசியல் செயற்பாட்டை முடக்குவதற்குமே இந்த சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படும் ஒருவரை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தாது 48 மணிநேரம் இந்த சட்டத்தின் கீழ் தடுத்துவைக்க முடியும். இந்த செயற்பாடு அடிப்படை உரிமையை மீறுகின்ற செயற்படாகும்.

நீதிவான் அனுமதியின்றி ஒருவரை 90 நாட்களுக்கு தடுத்து வைக்க முடியும். அதற்கான அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் நீதிவானின் முன்னிலையில் ஆஜர்படுத்தி மேலும் ஆறு மாதங்களுக்கு தடுத்துவைப்பதற்கான உத்தரவு பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு தடுத்து வைப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் சுயாதீனமான அரச அதிகாரி இல்லை. நேரடியாகவே அரசியல் நியமனத்தின் மூலமாக நியமிக்கப்பட்டவர்.

களனி, கொழும்பு தொகுதிகளில் அரசியல் கூட்டங்களில் உரையாற்றுகின்றார். அவரினால் தான் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது என்று விவாதிக்கட்டும். அது தவறில்லை. ஆனால், அரசியல் கூட்டங்களில் ஏறுகின்ற அதிகாரி ஒருவருக்கு கையொப்பம் இடுவதற்கான அதிகாரத்தை கொடுப்பதா? லங்கா ஈ நியூஸ் பத்திரிகை ஆசிரியருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அச்சுறுத்தல் விடுத்தார். அதன் பின்னர் எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இன்றி கைதுசெய்யப்பட்ட அவர் தடுத்து வைக்கும் உத்தரவின் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டு எவ்விதமான வழக்குகளும் இன்றி விடுவிக்கப்பட்டார்.

சட்டம் சாதாரண சட்டமாக இன்மையினால் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அடிப்படை உரிமை அப்பட்டமாக மீறப்படுகின்றது. அதுமட்டுமின்றி எதிரணியின் அரசியலை முடக்குவதற்கும் உண்மையை எழுதும் ஊடகங்களை அடக்கி எழுதுவோரை கைதுசெய்வதற்கும் இந்த அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

நீதிமன்றத்தின் அனுமதியை பெறாமல் வீட்டிற்குள் புகுந்து தேடுதலை நடத்த முடியாது. சோதனைக்கு உட்படுத்த முடியாது. ஆனால், எவ்விதமான உத்தரவையும் பெறாமல் படையினர் வாகனங்கள், வீடுகளுக்குள் உள் நுழைந்து சோதனையிடுகின்றனர். இவ்வாறான அதிகாரம் வடக்கு, கிழக்கிலேயே உபயோகிக்கப்படுகின்றது. யுத்தம் முடிவடைந்துள்ள நிலையிலும் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். கடத்தல், அச்சுறுத்தல், கைது மற்றும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பயப்பீதியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அங்கு சுதந்திரம் மற்றும் சாதாரண வாழ்க்கையை வேகப்படுத்த வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவினை பெறாது உறுப்புரையினை மீறியே செயற்படுத்தப்படுகின்றது.

அரசியலமைபின் பிரகாரம் பேச்சு, எடுத்து உரையாற்றுதல் மற்றும் மக்களை சேர்க்கும் உரிமை இருக்கின்றது. அது அடிப்படை உரிமையாகும். எனினும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் சொத்துக்களை கைப்பற்ற முடியும் அரசுøடமையாக்கவும் முடியும். 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. எனினும் அடிப்படை உரிமை அதில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர்களிடமிருந்து காணியை சுவீகரிப்பதற்கு 72 நாள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். மேன்முறையீடுகளுக்கு பின்னர் காணி உரிமையாளரின் எதிர்ப்பின்றி காணியை சுவீகரிக்க வேண்டும். அந்த முறைமை இன்று பின்பற்றப்படுவதில்லை.

பெற்றோர், பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என காணி உரிமை கலாசாரம் அதுவும் அவுஸ்திரேலியா, பிரித்தானியாவில் இல்லாத காணி கலாசாரம் இங்கு மட்டுமே இருக்கின்றது. எந்தவித முன்னறிவித்தலும் இன்றி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கையொப்பத்தில் காணியை சுவீகரிக்க முடியுமாயின் பாராளுமன்றம் எதற்கு? வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு அதில் 1202 வீடுகளில் பாதுகாப்பு படையினர் இருக்கின்றனர் என அரசாங்கமே ஒத்துக்கொண்டுவிட்டது.

அதுவும் தமிழ் மக்களின் வீடுகளை சுவீகரித்தமை சாதாரண சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விடயமாகும். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. சாதாரண சட்டத்தின் கீழ் நாட்டை நிர்வகிக்க முடியும். வடக்கில் சிவில் நிர்வாகம் இல்லை. யுத்தம் இடம்பெற்ற இடத்தில் சிவில் நிர்வாகத்தினை உருவாக்குவதற்கு காலம் தேவை.

ஆனால், 20 மாதங்கள் என்ன நடந்தது? யுத்தம் இராப்போசனம் இல்லை. நாம் பிரார்த்தனை செய்தாலும் இதுதான் நடைபெறும் என்று நினைத்திருந்தாலும் நினைப்பதை விடவும் கூடுதலாக இடம்பெறும். யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பு தொடர்பில் மக்கள் அச்சம் கொண்டிருப்பர்.

வடக்கில் இராணுவத்தினர் காலையில் ரோந்து செய்வது, மக்கள் பயணிக்கும் போது பல்குழல் பீரங்கிகள் பயணிப்பது, மாணவர்கள் பாடசாலைக்கு செல்கின்ற வேளையில் இராணுவ டிரக் வண்டிகள் பயணிப்பது உளவியல் ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலமாக மக்களை சாதாரண வாழ்க்கைக்கு கொண்டு வரமுடியாது. உள்ளூராட்சி மன்றங்களில் அரசாங்கத்தின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு நாங்கள் எதனையும் செய்ய முடியாது. வடக்கில் ஒடுக்கப்பட்ட மக்கள் வழமைக்கும் சாதாரண வாழ்க்கைக்கும் திரும்புகையில் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக அவர்களை பயன்படுத்தக் கூடாது. பல கட்சிகளுக்கும் இடமளிக்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும். வாக்குரிமையை பாதுகாக்கவில்லை என்றால் மக்கள் சாதாரண வாழ்க்கைக்கு எப்படி திரும்புவர்? சட்டத்தை திருத்தியிருக்கலாம். வடக்கில் தேசிய நிலைமையினை கருத்தில் கொண்டு விசேட ஏற்பாடுகளை கொண்டு வந்திருக்கலாம். வடக்கில் தேர்தலில் போட்டியிடும் ஜே.வி.பி. வேட்பாளர்கள் கைது செய்யப்படுகின்றனர்; அச்சுறுத்தப்படுகின்றனர். பழைய முறைமையிலிருந்து மீளமுடியவில்லை என்றால் வடக்கில் அல்ல, இங்கு அச்சுறுத்தவும் அங்கு சிவில் நிர்வாகத்தை உருவாக்க வழிசமைக்கவும்.

நல்லூர் கோப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மாவட்ட செயலாளருக்கு தெரியாமல் படையினர் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து 100 ரூபாவையும் பெற்றுக்கொண்டு அதில் ஒரு பிரதியை படைமுகாமிற்கு கொண்டுசெல்வதுடன் மற்றொன்றை வீட்டின் முன்னால் தொங்க வைத்துவிட்டு செல்கின்றனர். படையினர் தேடுதல் நடத்தும்போது புகைப்படத்தில் இருப்பவரை விட ஒருவர் கூடுதலாக இருந்தால் அவரை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.

ஜேர்மனியில் நாசிக இராணுவம் செய்ததை விடவும் இது மிக மோசமான நடவடிக்கையாகும்.இதனால் அங்குள்ள மக்கள் எவ்வாறான மன உளைச்சலுக்கு முகம்கொடுப்பர். பாதுகாப்பு படையினருக்கு அவசரகாலச் சட்டத்தின் கீழ் விசேட அதிகாரத்தை கொடுத்து சிவில் நிர்வாகத்தை இல்லாது வைத்துள்ளது. இது அத்தியாவசியமானது அல்ல.

சிரச ஊடக நிறுவனத்தின் மீது கல்லெறிந்தவர்களை ஊடகங்கள் படம்பிடித்து காண்பித்தவேளையில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால், அதேமுகங்களை கொண்ட சுவரொட்டிகள் களனி தொகுதியில் கை கூப்பிய நிலையில் மதில்களில் ஒட்டிவிடப்பட்டுள்ளன.

மக்கள் பிரதிநிதிகள் தாக்கப்படுகின்றனர். அவர்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. ஆனால், அச்சட்டத்தின் கீழ் எதிர்க்கட்சியினரும், ஊடகங்களும் தாக்கப்படுகின்றன.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் தனிநபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடு கேள்விக்குறியாகியுள்ளது என்பதுடன் அவசரகாலச் சட்டம் (உங்களுக்கு) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பின்னால் வருவதற்கு முன்னர் அவற்றை நீக்குவதற்கு தீர்மானிக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக