24 நவம்பர், 2010

பாக்.ஜனாதிபதி, இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை இலங்கை வருகின்ற நிலையில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார்.

இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரும் பாகிஸ்தான் ஜனாதிபதியும் நாட்டின் உயர்மட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

வியாழக்கிழமை இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் டி.எம். ஜயரட்ண ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெறும் இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்விலும் எஸ்.எம். கிருஷ்ணா பங்கேற்கவுள்ளார்.

அத்துடன் அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகங்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

இலங்கை பாகிஸ்தான் பாராளுமன்ற சங்கத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுநடத்தவுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி இலங்கை பாராளுமன்றத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார். அத்துடன் இலங்கையில் நடைபெறவுள்ள வர்த்தக மாநாட்டிலும் பாகிஸ்தான் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக