24 நவம்பர், 2010

தென்கொரியா மீது வடகொரிய இராணுவம் எறிகணைத் தாக்குதல் பலபேர் காயம், வீடுகள் தீப்பிடிப்பு; இரு நாட்டு இராணுவமும் மோதும் அபாயம்






தென் கொரியாவை நோக்கி வட கொரிய இராணுவம் நேற்று எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது. இரண்டு நாடுகளுக்கும் பொதுவான செம்மஞ்சள் கடற் பிரதேசத்தை நோக்கி ஏவப்பட்ட எறிகணைகள் தென் கொரியாவின் எல்லைக் கிராமங்களில் வீழ்ந்து வெடித்தன. இன்னும் சில தென் கொரியாவின் கடற்படைக் கப்பல்கள் மீதும் வீழ்ந்தன.

இதனால் கப்பலொன்று சேதமானதுடன் ஆறு கடற்படை வீரர்கள் காயமடை ந்தனர். இதில் ஒரு வீரரின் நிலைமை கவலைக்கிடமாயுள்ளது- மற்றும் கிராமப்புறங்களில் எறிகணைகள் வீழ்ந்ததால் பல வீடுகள் தீப்பற்றி எரிந்ததுடன் பொதுமக்கள் பலரும் இத்தாக்குதலில் கயமடைந்தனர். இதையடுத்து கொரியன் குடாவில் பெரும் பதற்றம் நிலவியது.

தென்கொரிய ஜனாதிபதி அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியதுடன் அவசர காலச் சட்டத்தையும் பிரகடனம் செய்தார். செம்மஞ்சள் கடற் பிரதேசத்தை நோக்கி தென் கொரிய இராணுவம் நகர்த்தப்பட்டதுடன், விமானப் படை விமானங்கள் அவசரமாக கண்காணிப்பு நடவடிக்கையில் இறங்கின.

சுமார் ஐம்பது எறிகணைகளை வடகொரிய இராணுவம் தென் கொரியாவை நோக்கி ஏவியது. இதனால் 1950, 1953ம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்றது போன்ற போர்ப் பதற்றம் நிலவியது. எறிகணைத் தாக்குதல்கள் ஆர்பமானதையடுத்து மக்களை வீடுகளைவிட்டு வெளியேறி பதுங்கு குழிகளுக்குள் நுழைந்து கொள்ளுமாறு தென்கொரிய அரசாங்கம் ஒலிபெருக்கிகளில் அறிவிப்புச் செய்தது.

மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினர். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய தென் கொரிய ஜனாதிபதி. வட கொரியாவின் செயல் ஆத்திரமூட்டுவதாகவுள்ளது. நிலைமைகளைச் சமாளிப்பதற்கேற்ற வகையில் இராணுவம் தயாராக உள்ளதென்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக