2 நவம்பர், 2010

வடமாகாண சபை: சகல அலுவலகங்களும் யாழ்ப்பாணத்திற்கு மாற்றம்


வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளர் அலுவலகங்கள் உட்பட அதன் கீழுள்ள சகல திணைக்களங்களும் ஜனவரி முதல் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன.

இதற்கமைய திருகோணமலை வரோதயர் நகரிலிருந்து முன்னெடுக்கப்பட்ட வட மாகாணத்தின் சகல செயற்பாடுகளும் ஜனவரி முதல் வட மாகாணத்திலிருந்து முன்னெடுக்கப்படும் என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாண மக்களின் நலனை கருத்திற் கொண்டும் அவர்களுக்கான சேவைகளை மேலும் துரிதப்படுத்தும் வகையிலுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வட மாகாண ஆளுநரின் உப அலுவலகம் ஒன்று கிளிநொச்சி நகரில் திறப்பதற்கும் திட்டமிடப்பட்டுள் ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வட மாகாண ஆளுநர் அலுவலகம், பிரதம செயலாளர் காரியாலயம் மற்றும் அதன் கீழுள்ள சகல திணைக்களங்களும் மாங்குளத்தில் நிரந்தரமாக அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், தற்காலிகமாகவே யாழ்ப்பாணத்திற்கு அதன் செயற்பாடுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வட மாகாண ஆளுநர் அலுவலகம் உட்பட சகல திணைக்களங்களும் அதன் செயற்பாடுகளை திருமலை, வரோதயர் நகரிலிருந்து முன்னெடுத்து வருகின்றன. வட மாகாணத்திற்கான செயற்பாடுகளை திருமலையிலிருந்து முன்னெடுத்து வருவதால் மக்களுக்கான பணிகளில் தாமதங்கள் காணப்படுவதுடன் அங்கு சேவையாற்றும் அதிகாரிகளும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

ஆளுநர் அலுவலகம் யாழ். நகரில் அமைக் கப்படவுள்ளதுடன் ஏனைய திணைக்களங்கள் அதனை அண்டிய பகுதிகளில் சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்திற்குள் அமைக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் சகல செயற்பாடுகளும் யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் திருமலை அலுவலகமும், கட்டடங்களும் ஜனவரியில் கிழக்கு மாகாண சபைக்கு கையளிக்கவுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக