2 நவம்பர், 2010

வடக்கு, கிழக்கில் 1177 அபிவிருத்தி திட்டங்கள்; ரூ. 1028 மில். ஒதுக்கீடு


கமநெகும திட்டத்தின் கீழ் இவ்வருடம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 1528 கிராம சேவகர் பிரிவுகளில் 1177 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக் கப்பட்டன. இதற்காக 1028 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர். ஏ. ஏ. கே. ரணவக்க கூறினார்.

‘கம நெகும’ திட்டம் தொடர்பான அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் அமைச்சில் நடைபெற்றது.

இதன் போது கருத்துத் தெரிவித்த அவர், 2010 ஆம் ஆண்டில் கமநெகும திட்டத்திற்கு 15,523 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு உட்பட நாடு பூராவும் உள்ள 10,483 கிராம சேவகர் பிரிவுகளில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

24,641 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு ள்ளதோடு 12,291 திட்டங்கள் இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ளன. வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட 232 திட்டங்களில் 84 வீதமான திட்டங்கள் நிறைவடைந்துள் ளன.

யாழ். மாவட்டத்தில் 94 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதோடு இதற்காக 83.37 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் 19.75 மில்லியன் ரூபா செலவில் 77 திட்டங்களும், முலலைத்தீவு மாவட்டத்தில் 23.23 மில்லியன் ரூபா செலவில் 19 திட்டங்களும், மன்னார் மாவட்டத்தில் 98.13 மில்லியன் ரூபா செலவில் 42 திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் 808 கிராம சேவகர் பிரிவுகளில் 945 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு 821 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 835.63 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 87 வீதமான திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளதோடு எஞ்சிய திட்டங்கள் இந்த வருட முடிவுக்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.

இதில் கொங்கிரீட் வீதிகள் அமைக்கவே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதோடு கிராமிய மின்சார வசதி, நீர்ப்பாசனம், குடிநீர் வசதி, பொதுவசதி என்பவற்றுக்காகவும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக