2 நவம்பர், 2010

சீன “எக்ஸ்போ” கண்காட்சி நிறைவு விழாவில் விசேட விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த


சீனாவின் ஷங்ஹாய் நகரில் ஆறு மாதகாலமாக நடைபெற்று வந்த “எக்போ 2010” உலக கண்காட்சி நேற்று முன்தினம் (31) நிறைவுபெற்றது. இந்த எக்ஸ்போ உலக கண்காட்சியின் நிறைவு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட விருந்தினராக கலந்து கொண்டார்.

கைத்தொழில் புரட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய ஆக்கங்களை உலகிற்கு அறிமுகம் செய்வதற்காக 1858 ஆம் ஆண்டிலே “எக்ஸ்போ” கண்காட்சி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் பல்வேறு அபிவிருத்தித் தொனிப்பொருள்களின் கீழ் இந்த கண்காட்சியானது சில வருடங்களுக்கொரு முறை நடைபெறுவது வழக்கம். இந்த உலகக் கண்காட்சியானது ஒரு வர்த்தக கண்காட்சியாக மிளிர்வது மட்டுமன்றி அதன் மூலம் அபிவிருத்தியின் பிரதிரூபம் வெளிக்காட்டப்படுகிறது.

இம்முறை சீனாவின் ஷங்ஹாய் நகரில் நடைபெற்ற “எக்ஸ்போ 2010” கண்காட்சியை 74 மில்லியன் மக்கள் பார்வையிட்டனர்.

1970ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ கண்காட்சியை 68 மில்லியன் மக்கள் பார்வையிட்டனர். இம்முறை அதன் வரலாற்றிலே அதிக மக்கள் பார்வையிட்ட சாதனையை ஷங்காய் கண்காட்சி படைத்துள்ளது. “எக்ஸ்போ 2010” கண்காட்சியின் தொனிப்பொருள் “நல்லதொரு வாழ்க்கை சிறந்ததொரு நகரம்” என்பதாகும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தக் கண்காட்சியானது அடுத்த முறை இத்தாலியின் மிலானோ நகரில் நடைபெறவுள்ளது.

31 ஆம் திகதி இரவு நடைபெற்ற இதன் நிறைவு விழாவில் விசேட விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். இருபதுக்கும் அதிகமான நாட்டுத் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் நிறைவு விழாவில் கலந்து கொண்டமை முக்கிய அம்சமாகும்.

இதில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், விமல் வீரவன்ச, ஜனாதிபதியின் வெளிநாட்டலுவல்கள் ஒருங்கிணைப்புச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஷ்குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, சீனாவிற்கான இலங்கை தூதுவர் கருணாதிலக்க அமுனுகம, ஷங் ஹாயின் இலங்கை கொள்சியுலர் மஹிந்த ஜயசிங்க கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக