2 நவம்பர், 2010

உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் இறக்குமதி வரிகள் உடன் குறைப்பு

பண்டிகைக் காலத்தையிட்டு அரசு அவசர ஏற்பாடு

உருளை கிழங்கு - ரூ.20
பெரிய வெங்காயம் - ரூ.15
பண்டிகை காலத்தின் நிமித்தம் சகல அத்தியாவசியப் பொருட்களையும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் (ச. தொ. ச) ஊடாக குறைந்த விலையில் சந்தைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஒரு அம்சமாக நேற்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உருளைக் கிழங்கினதும், பெரிய வெங்காயத்தினதும் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க உருளைக்கிழங்கு ஒரு கிலோ கிராமிற்கான இறக்குமதி வரியை 20 ரூபாவாலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமிற்கான இறக்குமதி வரியை 15 ரூபாவாலும் அரசாங்கம் குறைத்துள்ளது.

சகல அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்து ச. தொ. ச. மூலம் மக்களுக்குப் போதியளவில் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்தது.

அத்துடன் பண்டிகைக் காலத்தை காரணங்காட்டி அரிசி விலையை அதிகரிக்க வர்த்தகர்கள் முயலுவார்க ளேயானால் அரிசிக்கு மீண்டும் கட்டுப்பாட்டு விலையை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு இலட்சத்து 500 மெற்றிக் தொன் நெல் கையிருப்பில் உள்ளதால் தேவையான போது அவற்றை மக்களுக்கு அரிசியாக்கி குறைந்த விலையில் விற்பதற்கும் பின்நிற்கப் போவதில்லை எனவும் அமைச்சு தெரிவித்தது.

இது தொடர்பில் அமைச்சின் உயரதி காரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில்:- அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிக கவனம் செலுத்தி வருகிறார். அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்கின்றார்.

அதேவேளை; நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நியதிகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் மும்முரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக