24 செப்டம்பர், 2010

அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க புதிய அணி

அணு ஆயுதமற்ற உலகைப் படைக்கும் முயற்சியாக 10 நாடுகள் இணைந்து புதிய அணியை உருவாக்கியுள்ளன.

ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சிலி, ஜெர்மனி, மெக்ஸிகோ, ஹாலந்து, போலந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளன.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தின் ஒருபகுதியாக இந்த புதிய அணு ஆயுத எதிர்ப்பு நாடுகளின் கூட்டமும் வியாழக்கிழமை நடைபெற்றது.

அணு ஆயுதத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென இந்த நாடுகள் உறுதி எடுத்துக் கொண்டுள்ளன. கூட்டத்தில் பேசிய ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் கேவின் ரூட், இப்போது உலகுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடிய 23 ஆயிரம் அணு ஆயுதங்கள் பல்வேறு நாடுகளிடம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுள்ள வடகொரியா, ஈரானுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக குரல் எழுப்புவோம் என்றும் கேவின் ரூட் தெரிவித்தார்.

உலகில் அணு ஆயுதத்தால் பாதிக்கப்பட்ட ஒரே நாடு ஜப்பான். அங்கு அமெரிக்காவால் 1945-ல் வீசப்பட்ட அணுகுண்டுகள் இப்போது வரையிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக