24 செப்டம்பர், 2010

வவுனியாவில் தொடர் மழை : மீள்குடியேறிய மக்கள் அவலம்

வவுனியா பிரதேசத்தில் தொடர்மழை பெய்கிறது. இதனால் சொந்த இடங்களுக்கு மீள்குடியேறிய மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வீமன்கல் கிராமப்பகுதியில் 33 வருடங்களின் பின்னர் மீள்குடியேறியுள்ள குடும்பங்களின் கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இருப்பதற்கும் படுப்பதற்கும் முடியாத நிலையில் தாம் அவதிப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வீமன்கல் மட்டுமல்லாமல், குடாகச்சகொடி, பாவற்குளம், ரன்கெட்கம உள்ளிட்ட வேறு பல மீள்குடியேற்றக் கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பாதிப்புகள் குறித்து வவுனியா அரசாங்க அதிபர் சார்ள்ஸ் தெரிவிக்கையில்,

"தற்போது ஆரம்பித்துள்ள மழையினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை.

எனினும். மழையினால் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு வழங்குவதற்கென அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கு மேலதிக கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை, தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டு கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குத் தேவையான கூரைத்தகடுகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் தொடர்ச்சியான அல்லது கடும் மழையினால் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஐநாவின் அகதிகளுக்கான தூதரக அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதற்கென ஒரு திட்டத்தை வகுக்குமாறு அவர்களிடம் கோரியுள்ளோம். அந்தத் திட்டத்திற்கமைய பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்படும் குடும்பங்கள் பராமரிக்கப்படும் " என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக