24 செப்டம்பர், 2010

கச்சத்தீவை நோக்கி 10 ஆயிரம் இந்திய மீனவர் படையெடுப்பு!


இந்திய மீனவர்கள் 10,000 பேர் கச்சத்தீவை நோக்கிச் செல்லும் போராட்டம் ஒன்றை எதிர்வரும் (ஒக்டோபர்) 11 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருவதற்குக் கண்டனம் தெரிவித்தே இவர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கச்சத்தீவு அருகே சென்று மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடுவது தொடர்கதையாகி விட்டது. இது குறித்து மத்திய அரசும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

இந்திய அரசின் மெளனமும், அலட்சியமும் இலங்கை கடற்படையினருக்கே சாதகமாக உள்ளன. சுடப்படுவதும், உயிரிழப்பதும், தாக்கப்படுவதும், சேதங்களை சந்திப்பதும் மீனவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம், மகத்துவம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் போஸ், அந்தோணி, சேசுராஜா, எமரிட், ஜான், தட்சிணாமூர்த்தி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையைத் தமக்கு நிலைநாட்டித் தர வேண்டும் - எல்லை தாண்டிச் சென்ற 110 படகுகளுக்கு 'நோட்டிஸ்' வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் - இலங்கையில் உள்ள படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி, எதிர்வரும் 11ஆந் திகதி ஆயிரம் படகுகளில் 10 ஆயிரம் மீனவர்கள் ஒன்று திரண்டு கச்சத்தீவு சென்று போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக