24 செப்டம்பர், 2010

காணி அபகரிப்பு தொடர்ந்தால் உண்ணாவிரதப் போராட்டம்: த.தே.கூ

தமிழ் பிரதேசங்களில் காணி அபகரிப்புகள் அதிகரித்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழர் பகுதிகளில் ஒரு பிரிவினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அங்கு விகிதாசார அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். முறையற்ற வேலை வாய்ப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மீள் குடியேற்றப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மழைக் காலம் தொடங்கி விட்டமையால் அவர்கள் மீண்டும் அகதிகளாகவுள்ளனர். மழைக்கு ஒதுங்குவதற்கு பாடசாலையோ கோவிலோ இல்லை.

யுத்தம் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகின்ற போதிலும் மன்னார் மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்கு தற்போதும் பாஸ் நடைமுறையில் உள்ளது. கடலுக்குள் இறங்குவதற்கு பாஸ் பெற வேண்டும். புலிகள் அழிக்கப்பட்டு விட்டால் இந்த கட்டுப்பாடு எதற்கு?, பாஸ் எதற்கு? வடக்கு, கிழக்கில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. அதுவும் ஒரு சிறு பிரிவினருக்கே வழங்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கில் வழங்கப்படும் வேலை வாய்ப்புக்களில் விகிதாசாரம் பேணப்பட வேண்டும். இல்லையேல் அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம் முறையற்ற, தகுதியற்ற வேலை வாய்ப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்.

தமிழ் பகுதியில் காணி அபகரிப்புகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலைமை தொடர்ந்தால் இதற்கெதிரான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்ணா விதரம் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக