24 செப்டம்பர், 2010

இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு துருக்கியில் விசேட சலுகை நிவாரணம்



இலங்கை - துருக்கி ஜனாதிபதிகள் சந்திப்பில் இணக்கம்

இலங்கைத் தேயிலையை துருக்கிக்கு ஏற்றுமதி செய்யும்போது துருக்கியில் விதிக்கப்படும் குறிப்பிட்டவொரு வரியின் காரணமாக இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் சலுகை நிவாரண முறையொன்றை பின்பற்ற துருக்கி இணக்கம் தெரிவித்து ள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியூயோர்க்கில் வைத்து சந்தித்த துருக்கிய ஜனாதிபதி அப்துல்லா குல் மேற்கூறியவாறு இணக்கம் தெரிவி த்தார்.

துருக்கிய ஜனாதிபதியை சந்தித்த அதேவேளை ஜமேய்க்கா பிரதமர் புரூஸ் கோர்டனையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து பேசினார்.

புலிப் பயங்கரவாதிகளை தோற்கடிக்க முடியாது என பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்த கருத்தை பொய்யாக்கும் வகையில் இலங்கையில் 30 வருட காலம் நிலவிய பயங்கரவாதத்தை தோற்கடித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை துருக்கிய ஜனாதிபதி அப்துல்லா குல்லும், ஜமேய்க்கா பிரதமர் புரூஸ் கோர்டனும் பாராட்டினர்.

துருக்கிய ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையே விமான சேவையொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக ஒப்பந்தம் செயற்படுத்தும் விதம் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலும் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதுடன் வர்த்தக பரிமாற்றத்தை ஊக்குவிப்பது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.

இலங்கையில் இடம்பெறும் துரித அபிவிருத்தி தொடர்பாக துருக்கிய ஜனாதிபதி கேட்டறிந்தார். நிர்மாணத்துறையில் துருக்கிய அரசு முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் அவர்களது தொழில்நுட்பம் மற்றும் துருக்கிய நிறுவனங்கள் இலங்கையின் நிர்மாணத் துறைக்கு பங்களிப்பை செலுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

ஜமேய்க்கா பிரதமருடனான சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு மிடையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பது தொடர்பாக விசேடமாக பேசப்பட்டது.

நடுத்தர வருமானத்தைப் பெறும் நாடுகள் அபிவிருத்தி இலக்கை எட்டுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டது.

வெளிவிவகார அலுவல்கள், அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, சாந்த பண்டார, ரேனுக விதானகமகே, ஜே. ஸ்ரீரங்கா, சச்சின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, வெளிநாட் டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க, பேராசிரியர் பாலித கொஹேன மற்றும் ஜாலிய விக்ரமசூரிய ஆகியோரும் இந்த சந்திப்புகளின்போது உடனிருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக