24 செப்டம்பர், 2010

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழரின் மனங்களை வெல்ல வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை சமசமாஜ கட்சியின் மூத்த உறுப்பினர் பட்டி வீரக்க

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகுமென்று இலங்கை சமசமாஜக் கட்சியின் மூத்த உறுப்பினர் பட்டி வீரக்கோன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்காமல் 13ஆவது திருத்தத்திற்கும் அப்பால் செல்ல வேண்டியதில்லை என்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் முன்னிலையில் நேற்று (23) சாட்சியமளித்தபோது பட்டி வீரக்கோன் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தங்களுக்குப் பின்னர் முன்மொழியப் பட்ட தீர்வுகளைக் கொண்டு வந்தவர்கள் முன்னைய திருத்தத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை என்றும் பட்டி வீரக்கோன் தெரிவித்தார்.

ஆணைக் குழுவின் விசாரணை கொழும்பு 7, லக்ஷ்மன் கதர்காமர் நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. இதில் தொடர்ந்து சாட்சியமளித்த பட்டி வீரக்கோன், 1972, 1978 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புகள் முழுமையானதாக அமையவில்லை. ஜே. ஆர். ஜயவர்த்தனவின் அரசியலமைப்பிலும் குறைபாடுகள் காணப்பட்டதால், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கென 13 ஆவது திருத்தமொன்று கொண்டுவரப்பட்டது. இதற்காக ஜே. ஆர். அமைத்த அனைத்துக் கட்சிக் குழுவில் நானும் பங்குபற்றினேன். அதற்குப் பின்னர் இந்திய - இலங்கை உடன்படிக்கையின் ஊடாகவும் இந்தத் திருத்தத்திற்குச் சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டன.

ஆனால், மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்குவதையிட்டு ஐக்கிய தேசிய கட்சியினர் அச்சம் வெளியிட்டார்கள். ஆர். பிரேமதாசவைப் பொறுத்தவரை அவர், இந்திய தலையீட்டுக்கும் வடக்கு, கிழக்கு இணைப்புக்கும் எதிரானவராகக் காணப்பட்டார்.

பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியானதும் 13 ஆவது திருத்தத்தில் பாடங்களைக் கற்றுக்கொள்ளாது புதிய தீர்வொன்றுக்குச் சென்றார். அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் கருத்தின்படி தமிழர்கள், தமிழர்களாகவும் இலங்கையர்களாகவும் இருக்கவே விரும்புகிறார்கள் என்று தனது புத்தகமொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். சிங்களவர் எப்போதும் சிங்களவர்களாக நினைக்கிறார்கள்.

அரசாங்கமும் அப்படித்தான் எண்ணுகிறது. நான் எனது ஐம்பதாண்டு கால அரசியல் அநுபவங்களைக் கொண்டு இந்த சாட்சியத்தை அளிக்கின்றேன் என்றார்.

ஆணைக்குழு முன்னிலையில் இன்றைய தினம் முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப் சாட்சியமளிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக