6 செப்டம்பர், 2010

இன்று 'லைலத்துல்கத்ர்' : ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஓர் இரவு!

முஸ்லிம்களின் புனித தினங்களில் ஒன்றாகக் கருதப்படும் 'லைலத்துல்கத்ர்' இரவு இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

றமழான் மாதம் ஆரம்பித்து இன்று 26 தினங்களாகின்றன. இன்று 27ஆம் இரவாகும். றமழான் மாதத்தின் 27ஆம் இரவு, ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த ஓர் உயர்வான இரவாக முஸ்லிம்கள் இதனைக் கருதுகின்றனர். இன்று இரவு முழுவதும் விழித்திருந்து நற்காரியங்களில் (அமல்களில்) ஈடுபடுவர்.

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பள்ளிகளிலும் மற்றும் அனைத்து முஸ்லிம் கிராமங்களிலும் இன்று பின்னேரம் முதல் நாளை அதிகாலை வரை விசேட சமய நிகழ்சச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை விசேட நிகழ்ச்சிகளை இன்றிரவு நடத்துகிறது. முஸ்லிம்கள் பொதுவாக பாவமன்னிப்புத் தேடுவதில் இன்றிரவைச் செலவிடுவர்.

மரணத்தின் பின் ஒரு நிரந்தர வாழ்க்கை இருப்பதாக முஸ்லிம்கள் திடமாக நம்புகின்றனர். அந்த நிரந்தர வாழ்வில் சுவர்க்கம், நரகம் என இரண்டு ஏற்பாடுகள் இறைவனால் வழங்கப்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர்.

அதில் உலகில் நன்மை புரிந்து இறைவனை விசுவாசித்தவர்களுக்கு(இறை விசுவாசிகளுக்கு) சுவர்க்கமும் இறைவனை மறந்து பாவச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு (பாவிகளுக்கு) நரகமும் கிடைக்கும் என்பதே முஸ்லிம்களின் பிரதான நம்பிக்கை, கோட்பாடு, சித்தாந்தம்.

இந்த அடிப்படையில் நரக விடுதலை கிடைக்க இன்றைய இரவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

மனித குலம் உலகில் தோன்றியதன் நோக்கம், மண்ணுலக வாழ்வையடுத்து வரும் மரணத்தின் பின்னர் சுவர்க்கம் சென்றுவிட வேண்டும் என்பதில் முஸ்லிம்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில் நற்காரியங்கள் செய்யவேண்டும் என்பதையும் இறைவனை மட்டுமே வழிபடவேண்டும் என்பதையும் முஸ்லிம்கள் தமது பிரதான கடமைகளாகக் கருதுகின்றனர்.

அந்த வகையில், இன்றைய இரவில் முஸ்லிம்கள் நித்திரை விழித்து, நற்காரியங்கள் புரிந்து இறைவனிடம் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி, நரக விடுதலைக்காக பிரார்த்திப்பார்கள்.

இறைவனின் அன்பும் பாவமன்னிப்பும் பெற்று, அனைத்து முஸ்லிம் பெருமக்களுக்கும், விடுதலையடையும் நற்பாக்கியம் கிட்டவேண்டுமென வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக