6 செப்டம்பர், 2010

18வது திருத்தம் வரலாற்றில் இடம் பிடிக்கும் - பிரதமர்






பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் அரசியலமைப்புத் திருத்தமாக 18வது திருத்தம் வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று கம்பளையில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 18வது திருத்தத்திற்கு ஆதரவை தெரிவிக்கும் ஊர்வலங்களையும் பொதுக் கூட்டங்களையும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு கம்பளை நகரில் நேற்று காலையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஐ. தே. கட்சியின் கண்டி மாவட்ட எம். பி. ஏ.ஆர். எம். அப்துல் காதரும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பிரதமர் டி. எம். ஜயரட்ன தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் நாட்டில் புதிய யுகத்தை ஏற்படுத்தும். அதனூடாக நாட்டில் மறுமலர்ச்சியும், சுபீட்சமும் ஏற்படும். அரசியலமைப்பு என்பது நாட்டுக்கு உகந்தவகையில் இருக்க வேண்டும். அதற்கேற்ப அவ்வப்போது திருத்தங்களைச் செய்வது அவசியம். இதைவிடுத்து காலங்கடந்த அரசியலமைப்பால் நாட்டுக்கு எந்த நன்மையுமே கிடைக்காது.

ஜனாதிபதி பதவியை இரு தடவைகள் வகிப்பவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவதற்கு இத்திருத்தம் வழி செய்கிறது.

இதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தத் தேவையில்லை என உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது.

இதன்படி தாய்நாட்டின் மீது அன்பு, பற்றுக்கொண்ட தலைவர் மூன்றாவது தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கின்றது. அதற்கு இடமளிக்கப்பட வேண்டும். அவரை திரும்பவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதா? இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் அதுவே ஜனநாயக முறைப்படி சரியானதுமாகும்.

இந்தத் திருத்தத்திற்கு ஆதரவு நல்க ஐ. தே. க. வின் பல முக்கியஸ்தர்கள் ஏற்கனவே முன் வந்திருக்கின்றார்கள். இதனால் அற்ப அரசியல் நோக்கங்களைக் கைவிட்டு பொது நோக்கோடு இத் திருத்தத்திற்கு ஆதரவு நல்க சகல எம். பிக்களும் முன்வரவேண்டும் என்றார்.

இந்நிகழ்வின் போது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் டி. எம். ஜயரட்ன தலைமையில் ஊர்வலமும் நடாத்தப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக