6 செப்டம்பர், 2010

அரசியலமைப்பு திருத்தம் 8ம் திகதி சபையில்; பிரதமரால் சமர்ப்பிப்பு; 9 1/2 மணி நேர விவாதம்

15க்கு மேற்பட்ட ஐ.தே.க. எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பர்



அரசியலமைப்புக்கான 18வது திருத்தயோசனை நாளை மறுதினம் 8ம் திகதி பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக் கின்றது.

இத்திருத்த யோசனையைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ன சபையில் சமர்ப்பிப்பார். இதற்காக பாராளுமன்ற அமர்வு காலை 9.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திருத்த யோசனையை நாளை மறுதினம் சபையில் சமர்ப்பித்து அதே தினம் விவாதம் நடாத்தவும், சபையில் நிறைவேற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், இளைஞர் விவகார அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தினகரனுக்கு நேற்றுத் தெரிவித்தார்.

நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற இத்திருத்தத்திற்கு கடந்த பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 15க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிக்க விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்புக்கான 18வது திருத்த யோசனை 160க்கும் மேற்பட்ட வாக்கு களைப்பெற்று சபையில் நிறைவேறும் எனவும் அவர் கூறினார்.

அரசியலமைப்புக்கான 18வது திருத்த யோசனைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக ஐ.தே.க., ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் கூறியுள்ளன. ஆனால் அதே கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டில் ஜனநாயகம் இல்லை என்கின்றனர். நாட்டில் ஜனநாயகம் இல்லாவிட்டால் இவர்களால் எவ்வாறு இத் திருத்த யோசனைக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்?

இவர்களது செயற்பாடுகளே இவர்களது கூற்றுக்களைப் பொய்ப்பிக்கின்றன. அதனால் அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைக்கு இவர்களது செயற்பாடுகள் எந்தப் பாதிப்பையுமே ஏற்படுத்தாது எனவும் அவர் கூறினார்.

அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்தின் கீழ் இரண்டு தடவைகள் ஜனாதிபதி பதவியை வகித்தவர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு யாப்பில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு நீக்கப்படுகின்றது. இக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் இரண்டு தடவைகள் ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர் எத்தனை தடவையும் வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும், ஜனாதிபதி பதவியை வகிக்கவும் இடமளிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக