6 செப்டம்பர், 2010

மக்கள் பிரதிநிதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? சகாயமணி மனைவி

தனது கணவனை கடத்தியவர்கள் யார் எனத் தனக்கு நன்றாகத் தெரியும். எனது கணவன் ஓர் மக்கள் பிரதிநிதி. மக்கள் பிரதிநிதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினர் பிரகாசம் சகாயமணியின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினரான சகாயமணி கடந்த மாதம் 23ஆம் திகதி கடத்தி செல்லப்பட்டு இன்றுடன் 13 நாட்களாகின்றன.

இந்நிலையில் உறுப்பினர் பிரகாசம் சகாயமணியின் வீட்டிற்கு, கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று சென்றார்.

இதன் போதே சகாயமணியின் மனைவி சந்திரகாந்தனிடம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சகாயமணியின் மனைவி,

எனது கனவர் கடத்தப்பட்டு இதுவரை எவ்வித முடிவுகளும் கிடைக்கவில்லை. குறிப்பாக மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. நான் இன்னும் ஓரிரு நாட்களில் எனது கணவன் வீடு திரும்பவில்லை என்றால் மாநகர சபை மேயருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து எனது பிள்ளைகளுடன் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன் என மிகவும் மன வேதனையுடன் தெரிவித்தார்.

இதனையடுத்து சந்திரகாந்தன் சகாயமணியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதுடன் வெகு விரைவில் இது தொடர்பில் தாம் முக்கிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்தாகவும் குறிப்பிட்டடார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக