8 ஜூலை, 2010

இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலக பாதுகாப்பு குறித்து உயர்பட்ட குழுவினர் சந்திப்பு

கொழும்பிலுள்ள ஐ. நா சபையின் அதிகாரிகளின் பாதுகாப்புக் குறித்து உறுதிமொழி வழங்குவது தொடர்பில் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்தில் ஐ.நா உயர்மட்ட அதிகாரிகளுடன் இலங்கை அரசு தரப்பு உயர்மட்டச் சந்திப்பொன்றை நடத்தியுள்ளது.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. அலுவலகம் முன்பாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினர் ஐ.நா. அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறவிடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து ஐ.நா. அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையிலேயே கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உயர்மட்டச் சந்திப்பொன்றினை ஐ.நா. தலைமையகத்தில் இலங்கை அரசின் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா.வின் இணைப்பேச்சாளர் சோய் சோங்ஆ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தமது அலுவலகத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து தொடர்ந்து கவனமெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனைத் தொடர்ந்து நிலைமைகள் சீராகும் பட்சத்தில் அதிகாரிகள் வெகுவிரைவில் கடமைக்குத் திரும்புவர் எனவும் சோங்ஆ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், சுமுகமான முறையில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஐ.நா.வின் செயற்திட்டங்களுக்கு இடையூறு விளைவிக்குமெனவும் குறிப்பிட்ட அவர், ஐ.நா.வானது இலங்கை வாழ் மக்களுக்கு உதவுவதற்காகவே அங்கு நிலைகொண்டுள்ளதென்பதை அரசாங்கம் கட்டாயமாக உணர்ந்து கொள்ளவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக