8 ஜூலை, 2010

இலங்கை போர்க்குற்றத்தை அறியும் விசாரணை குழுவை கலைக்கமாட்டோம்: ஐ.நா. சபை அறிவிப்பு





கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக இறுதிக் கட்ட போர் நடந்தது. அப்போது, இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது. சரண் அடைந்த விடுதலைப்புலிகளையும் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியது.

இதன் காரணமாக, “இலங்கை ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது. போர்க்குற்றம் புரிந்தது என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியது. “இலங்கை தமிழர்களை நீண்ட நாட்கள் அகதிகளாக வைக்கக்கூடாது” என்றும் கூறியது.

இலங்கை அரசின் அத்து மீறல் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை ஐ.நா. சபை நியமித்தது. இதற்கான உத்தரவை ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கீ மூன் 2 வாரங்களுக்கு முன்பு பிறப்பித்தார்.

ஐ.நா.சபை நியமித்த விசாரணை குழு இலங்கை சென்று ராணுவ குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஐ.நா.சபை விசாரணை குழு இலங்கை சென்று விசாரணை நடத்தினால், இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக நடந்து கொண்ட மனித உரிமை மீறல், ராணுவ விதிகளுக்கு மீறாக நடத்தப்பட்ட கொலை மற்றும் கொடூர சித்ரவதைகள் அம்பலமாகும். இதனால் உலக அரங்கில் இலங்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

எனவே, ஐ.நா.சபை இலங்கையில் விசாரணை நடத்தக்கூடாது. அப்படி நடந்தால் அதன் மூலம் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படும் என்று கூறி ஐ.நா. விசாரணை குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அரசின் மூத்த மந்திரி விமல் வீரவன்ச தலைமையில் கொழும்பில் உள்ள ஐ.நா. சபை அலுவலகம் அருகே நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்றும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணை குழுவை கலைக்கக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இலங்கை மந்திரியின் தலைமையில் ஐ.நா.சபைக்கு எதிராக நடைபெறும் போராட்டத்துக்கு ஐ.நா. அதிகாரி பர்கான் ஹக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

ஐ.நா.சபைக்கு எதிராக இலங்கையின் மூத்த மந்திரி ஒருவரே தலைமை தாங்கி போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. கொழும்பு ஐ.நா. அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டுள்ளது. இலங்கை மந்திரியின் வேண்டுகோள் ஒருபோதும் ஏற்கப்படாது. ஐ.நா. விசாரணை குழு கண்டிப்பாக கலைக்கப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.நா. குழு விசாரணை நடத்தினால் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் வெட்ட வெளிச்சமாகும். ராணுவத்தின் போர்க்குற்றங்களும் அம்பலமாகும். எனவே விசாரணையை போராட்டம் நடத்தி தடுக்கும் முயற்சியில் இலங்கை மந்திரி ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஐ.நா.வுக்கு விடுத்த கோரிக்கையில், “இலங்கை அரசின் நெருக்கடிக்கு பணியாமல் ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்தி மனித உரிமை மீறல் குற்றங்களில் இருந்து இலங்கை அரசு தப்ப முடியாது” என்று கூறி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக