8 ஜூலை, 2010

பொது மக்களின் காணிகளை இராணுவத் தேவைக்கு பயன்படுத்துவதை தடுக்க இந்தியா உதவவேண்டும்


இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை அரசாங்கம் இராணுவத் தேவைக்காக எடுக்கும் நடவடிக்கைகளை இந்தியா தடுத்துநிறுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வன்னிப் பிரதேசத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளை எடுத்துக் கூறிய தமிழ் கூட்டமைப்பினர், மக்களின் புனர்வாழ்வுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை இந்திய அரசாங்கம் வழங்க முன்வர வேண்டு மெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

புதுடில்லிக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவினர், நேற்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியபோதே, இக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

கூட்டமைப்புக் குழுவினர் இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவுத் துறை செயலர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஞாயிறன்று புதுடில்லிக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவினர், திங்களன்று இந்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவை சந்தித்து பேச்சுக்கள் நடத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்தே நேற்று உள்துறை அமைச்சரையும், நிதியமைச்சரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு முன்வந்துள்ள இந்தியாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுக் குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்தியா வட பகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களைச் செய்யவிருப்பதாகவும், அவற்றுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுள்ளதாகவும் குழுவில் இடம்பெற்றுள்ள செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்துள்ளார் தலைமன்னாருக்கான கப்பல் சேவையை இந்தியா ஆரம்பிக்கவுள்ளதுடன், வட பகுதியில் ரயில்வே பாதை அமைத்தல், காங்கேசன்துறை துறைமுகத்தைப் புனரமைத் தல் உள்ளிட்ட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் இந்தியா வடக்கில் மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்தச் சந்திப்புக்களின் போது, இந்திய அமைச்சர்கள் இருவரும் தங்களிடம் தெரிவித்ததாகவும் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக