8 ஜூலை, 2010

தனக்கு கல்லறையினை தெரிவுசெய்த மேர்வின்

பிரதி நெடுஞ்சாலைகள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று புகழ்பெற்ற பாடகர் எச்.ஆர்.ஜோதிபாலவின் 23ஆவது ஞாபகார்த்த தினத்தை நினைவு கூருவதற்காக பொரளை கனத்தை மயானத்திற்குச் சென்றபோது, தமது கல்லறையையும் ஒதுக்கிக் கொண்டார். காலம்சென்ற பாடகரின் கல்லறைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த அமைச்சர் சில்வா திடீரென அனைவரினதும் ஆச்சரியத்திற்கு மத்தியில், எதிர்காலத்தை பற்றி யாருமே நிர்ணயிக்க முடியாது என்று கூறிக் கொண்டே தமது கல்லறையை தாம் இப்போதே ஒதுக்கி கொள்வதாக கூறினார்.

இதன் பின்னர் காலஞ்சென்ற பாடகரின் கல்லறைக்கு சமீபமாக ஒரு வெற்றிடத்தை காண்பித்து அதனை தமக்கு ஒதுக்கப் போவதாக தெரிவித்த அமைச்சர் தமது செயலாளரிடம் கொழும்பு மாநகர விசேட ஆணையாளர் ஒமார் கமீலுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்குமாறு கூறினார். ஆணையாளர் கமீலுடன் சிறிது தூரத்தில் நின்று கொண்டு தொலைபேசியில் தனிப்பட்ட முறையில் பேசிய பின்னர் அங்கு குழுமியிருந்தவர்களிடம் திரும்பிய அமைச்சர் சில்வா தாம் ஒதுக்கிய கல்லறையை மாநகர சபைக்கு அறிவித்துவிட்டதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஆங்கில இணையத்தளம் ஒன்றின் செய்தியாளர் மாநகர ஆணையாளரிடம் தொடர்பு கொண்டு அமைச்சர் சில்வா கூறியது பற்றி கேட்டபோது, அமைச்சர் சில மாதங்களுக்கு முன்னர் காலமான அவரது தாயார்பற்றிய விடயம் ஒன்று குறித்து தம்முடன் பேசியதாகவும் அமைச்சர் தம்மைப்பற்றி எதுவும் பேசவில்லை என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அங்கு குழுமி இருந்தவர்கள் மத்தியில் சமூகமளித்திருந்த மயானத்தின் பிரதம காவலரை அழைத்த அமைச்சர் சில்வா "மேர்வின் சில்வாவின் கல்லறையை ஞாபகத்தில் வைத்திருங்கள்' என்று கூறியதுடன் தமது மரணத்தின் பின்னர், குறிப்பிட்ட அதே இடத்தில்தான் தமது பூதவுடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

கூடி நின்றவர்களை மேலும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் தொடர்ந்து பேசிய அமைச்சர், "முடியுமானால் இன்றைக்கே எனது பிரேதப் பெட்டியை நான் கொள்வனவு செய்திருப்பேன். ஆனால் துரதிஷ்டவசமாக அதனை வைத்திருப்பதற்கு எனது வீட்டில் இடவசதி போதாது' என்றும் கூறினார். எவருக்கும் ஒரு நாள் இறப்பு வரும். எதிர்காலத்தை எவருக்கும் நிர்ணயிக்க முடியாது. யாரும் பணம் வைத்திருக்கலாம். அதில் ஏதும் விசேடம் இல்லை. பணத்தினால் மரணத்தை தடுத்துவிட முடியாது. எனவே நானும் மரணத்திற்கு பயப்படவில்லை என்று அவர் கூறினார்.

இதன் பின்னர் பிரதம காவலருடன் தமது கல்லறைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்ற அமைச்சர் அந்த இடத்தை குறித்து வைப்பித்ததோடு மயான தொழிலாளர்களைக் கொண்டு அவ்விடத்தை சுத்தம் செய்வித்துக் கொண்டார். இதன் பின்னர் அவ்விடத்தில் மேளவாத்தியத்துடன் நின்றவரை அழைத்து மயானத்திலிருந்து செல்ல முன்னர் ஜோதிபாலாவின் பாடல் ஒன்றை இசைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக