8 ஜூலை, 2010

மீண்டும் பொலிஸ் பதிவை மேற்கொள்ளுமாறு வெள்ளவத்தை மக்களுக்கு பொலிஸார் அறிவிப்பு

வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மீண்டும் தங்களைப் பொலிஸில் பதிவுசெய்ய வேண்டுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முச்சக்கர வண்டி மற்றும் பொலிஸ் வாகனங்களில் ஒலி பெருக்கிகளை பொருத்திக் கொண்டு பொலிஸார் இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.

மேலிடத்தின் பணிப்புரையின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனால் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனைவரும் கட்டாயமாக பொலிஸில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நாட்டின் சகஜ நிலை காரணமாக வெளிநாட்டிலிருந்தும் பெருமவிலானோர் வந்து விடுதிகள் மற்றும் லொட்ஜிகளில் தங்கியிருப்பதாகவும், இவர்கள் தொடர்பான பதிவுகள் எதுவும் இல்லை எனவும் கூறும் பொலிஸார் அனைவரும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதேவேளை வெள்ளவத்தை பகுதியில் மீண்டும் பொலிஸ் பதிவை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் வெள்ளவத்தை பகுதியில் உள்ள மக்களுக்கு மாத்திரமா அல்லது ஏனைய பகுதிகளுக்கும் பொருத்துமா? என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் பிரசாந்த ஜயகொடியிடம் வினவியபோது, மீண்டும் பொலிஸ் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அறிவித்தல் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அது தொடர்பாக ஆராய வேண்டியுள்ளதாகவும் கூறினார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நாட்டில் சுமூகமான நிலை தோற்றுவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த காலத்தில் இருந்து வந்த பொலிஸ் பதிவு முறைகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே வெள்ளவத்தை பகுதியில் மீண்டும் பொலிஸ் பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் திணைக்களத்திலிருந்தோ அல்லது பாதுகாப்பு அமைச்சிலிருந்தோ இதுவரையிலும் பொதுவான அறிவித்தலொன்று விடுக்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு வேறு எந்த பொலிஸ் பிரிவிலும் இவ்வாறு பொது மக்கள் மீண்டும் பொலிஸில் பதிவு செய்ய வேண்டுமென அறிவிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக