ஊடகவியலாளர்களுக்காக சகல வசதிகளையும் கொண்ட ஊடகக் கிராமம் ஒன்றை அமைப்பதே தனது நீண்டகால கனவுயென பதில் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்தார்.
லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு நேற்றுக் காலை வருகை தந்த அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊடகத்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு வருகை தந்த அமைச்சருக்கு பெரு வரவேற்பு வழங்கப்பட்டது.
நிறுவனத்தின் தலைவரும் பிரபல ஊடகவியலாளருமான பந்துல பத்மகுமார உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள், தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் இணைந்து அமைச்சரை வரவேற்றனர்.
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் சென்ற அமைச்சர் மேர்வின் சில்வா, குறை நிறைகளைக் கேட்டறிந்துக்கொண்டார். இதேவேளை லேக்ஹவுஸ் நிறுவனத்தின் அச்சகப் பகுதியை பார்வையிட வந்த பாடசாலை மாணவர்களுடனும் அமைச்சர் பேசினார். அவர் மேலும் உரையாற்றுகையில்:-
பேனாவை கையில் எடுத்த அனைவ ரையும் ஊடகவியலாளர்கள் என கூறிவிட முடியாது. ஊடகவிய லாளர்களாக தம்மைக் காட்டிக்கொண்டு பலர் கடந்த காலங்களில் நடந்துகொண்ட விதத்தை முழு நாடும் அறியும். வெளிநாட்டுக்குச் சென்று குடியிருப்பதற்காக சிலர் தம்மைத் தாமே தாக்கிக்கொண்டனர்.
சந்தர்ப்பவாதம், அதிகார ஆசை, பழிவாங்குதல், கோபம் என்பவற்றை புறந்தள்ளி, தமது பேனாவை பயன்படுத்த வேண்டியது சகல ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும். இதன் மூலமே உண்மையான ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும். ஊடகவியலாளரின் குடும்பப் பின்னணி, சமூக அந்தஸ்து என்பவற்றை மேம்படுத்துவதன் மூலமே சிறந்த ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும்.
குடும்ப பிரச்சினை, மனதில் இருக்கையில் தனது கருத்தை தெளிவாகவும் சுதந்திரமாகவும் சமூகத்துக்கு முன்வைக்க முடியாது. அதனால் அனைத்துக்கும் முன்பாக ஊடகவியலாளர்களின் சமூக அந்தஸ் த்தை உயர்த்தி பொருளாதார ரீதியில் அவர்களை பலப்படுத்த வேண்டியது மிக முக்கியமாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெளத்த மதத்தால் போசிக்கப்பட்ட தலைசிறந்த தலைவர். அத்தகைய தலைவரின் கீழ் பணியாற்ற கிடைத்தது நாம் அனைவரும் செய்த பாக்கியமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார, ஆசிரியர் பீட பணிப்பாளர் நிஹால் ரத்னாயக்க, பணிப்பாளர் உபுல் திஸாநாயக்க, பொது முகாமையாளர் அபய அமரதாஸ, பிரதி பொது முகாமையாளர் நாரத சுமனரத்ன, உட்பட தொழிற்சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
ஊடகத்துறை பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட கலாநிதி மேர்வின் சில்வா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 16வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பூட்டான் சென்றதையடுத்து பதில் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக