28 ஏப்ரல், 2010

மத்திய மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தெரிவில் கட்சிக்குள் குழப்பம் கண்டி மாவட்ட தலைவர் காதரா? கிரியெல்லவா?

மத்திய மாகாண சபையில் எதிர்க்கட்சியாக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சியில் எதிர்க் கட்சித் தலைவர் ஒருவரை தெரிவு செய்வதில் பிரச்சினைகளும் கருத்து முரண்பாடுகளும் தலைதூக்கியுள்ளன.

மத்திய மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த வசந்த அலுவிகார பொதுத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். இதனால் மத்திய மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இவ்வெற்றி டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய மாகாண சபை உறுப்பினரான கே. கே. பியதாஸவை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

இச்செயல் ஏனைய ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ள தோடு, மத்திய மாகாண சபையில் நீண்டகால உறுப்பினர்களாக விளங்கும் ஒருவரை கட்சி நியமிக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எதிர்வரும் மே மாதம் 4 ம் திகதி மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்திற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை ஐ.தே.க. தீர்மானிக்க வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, ஐ.தே.க.வின் கண்டி மாவ ட்ட தலைமை யார்? என்பதில் தற்போது கட்சி எம்.பி.க்களான அப்துல் காதர் மற்றும் லக்ஷ்மன் கிரியெல்லவுக்குமிடையில் கருத்துமோதல் வெடித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வின் சார்பில் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்ற தனக்கே கட்சியின் கண்டி மாவட்ட தலைமை வழங்கப்பட வேண்டுமென்பது காதர் எம்.பி.யின் வாதமாகவுள்ளது.

லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. விருப்பு வாக்கு அடிப்படையில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.

அவர் உடனடியாக மாவட்ட தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டுமென்றும் காதர் எம்.பி. வாதிடுகின்றார்.

அத்தோடு, மு.கா. தலைவர் கூட விருப்பு வாக்கினடிப்படையில் என்னிடம் தோல்வி கண்டுள்ளார். அவரும், ஐ.தே.க. மற்றும் இதர விடயங்களில் தன்னிச்சையாக செயற்பட முடியாதென்றும், மக்கள் என்னையே அங்கீகரித்துள்ளனர் என்பதும் காதர் எம்.பி.யின் வாதமாகவுள்ளது.

ஐ.தே.க.வின் முஸ்லிம் தேசிய அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ள காதர் எம்.பி. தொடர்ச்சியாக கட்சியுடனும், கட்சித் தலைமையுடனும் முறுகல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக