3 ஏப்ரல், 2010

அரசியல்வாதியின் மதிப்பை இனி எண்ணிப் பார்க்கலாம்

உயிருள்ள போதே சிலையாக வைக்கப்பட்டு தினந்தோறும் ரூபா நோட்டு மாலையினால் அர்ச்சிக்கப்படும் பாக்கியம் ஒரு அரசியல்வாதிக்கு கிடைத்திருக்கிறது.

உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதிதான் அந்த பாக்கியசாலி. இந்த பாக்கியத்தை பெற்ற மாயாவதி அண்மைக்காலத்தில் ஒரு சர்ச்சைக்குரிய பெண்ணாகவும் மாறியிருக்கிறார்.

முதலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல இடங்களில் இவருக்கு சிலை வைத்தார்கள். இந்த சிலைகள் அகற்றப்படவேண்டும் என எதிர்க் கட்சிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தன. வழக்குகளும் போடப்பட்டன. ஆனால் ஒரு சிலையாவது அகற்றப்பட்டதாக தெரியவில்லை. வைத்த சிலைகள் வைத்த இடத்திலேயே இருந்தன.

அடுத்து வந்தது மாயாவதியின் பிறந்த நாள்.

பிறந்த நாளை கொண்டாடுபவருக்கு ரோஜா மாலை அணிவிப்பதுதான் வழக்கம். ஆனால் மாயாவதிக்கு அணிவிக்கப்பட்டதோ ரூபா மாலை 2 1/2 கோடி ரூபா நோட்டுக்களை தாங்கிய நோட்டு மூடையே மாலையாகியது. இதற்கும் பலத்த எதிர்ப்பு இம்முறை பாராளுமன்றத்திலும் ஒலித்தது. இந்த சர்ச்சை இன்னும் அடங்கவில்லை புகைகிறது.

இந்த நிலையில் இப்போது ஒரு புதுச் செய்தி.

மாயாவதிக்கு கோயில் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தில் உள்ள நத்புருவா என்ற கிராமத்தில் இந்த கோயில் கட்டப்படுகிறது. கட்டுபவர் மாயாவதியின் தீவிர பக்தர். சட்டப் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். அவர் ஒரு வக்கீல். பெயர் கங்கையாலால். கோயிலில் மாயாவதியின் ஆள் உயர சிலை வைக்கப்பட்டு தினமும் புத்தம் புதிய ரூபா நோட்டுக்களினாலான மாலை அணிவிக்கப்படும் என்று கங்கையாலால் கூறியுள்ளார்.

மாயாவதியின் மதிப்பை இனிமேல் எண்ணிப் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் மற்றைய மாநிலங்களில் இன்னுமொரு தேவிக்கு சிலை வைக்கப்பட்டு நோட்டு மாலை அணிவிக்கப்பட்டால் யாருக்கு அதிக மதிப்புள்ள ரூபா நோட்டு மாலை என்று பிரச்சினை எழாமல் இருக்கும் வரை எல்லாம் சரிதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக