அமைச்சரவையை 35 ஆகக் குறைக்கப் போவதாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பிரசாரங்கள் போலியானவை. மக்களை ஏமாற்றுவதற்கான யுக்தியே இது. அமைச்சரவையைக் குறைக்க வேண்டுமென்று உண்மையான நோக்கம் இருந்தால் தேர்தல் முடியும் வரை காத்திராது எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னராக அதனைச் செய்து காட்டுமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஏப்ரல் 9ஆம் திகதி அதிகாரத்தைக் கைப்பற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது வேலைத் திட்டமே 17ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி, சுயாதீன ஆணைக் குழுக்களை நிறுவி, அதன் மூலம் மக்கள் விரும்புகின்ற ஜனநாயகம் நிறைந்த நல்லாட்சிக்கு வழிவகுப்பதே ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் கல்கிசையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவரும் முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
"கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்நாட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு தவறியுள்ளதுடன் விலைவாசிகளைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு யுத்தத்தின் மேல் காரணம் கூறப்பட்டது. இருந்தும் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் கூட இந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
யுத்தத்திற்கு நிதி செலவிடப்பட வேண்டுமென்றாலும் செலவே இல்லாது செயற்படுத்தப்பட வேண்டிய விடயங்களையும் அவர் நடைமுறைப்படுத்தவில்லை. அந்த வகையில் அரசியலமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள 17ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் அதன் மூலம் சுயாதீன ஆணைக் குழுக்களை நிறுவுவதற்கும் ஜனாதிபதி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், பொலிஸ் துறை, தேர்தல்கள், அரச சேவை உள்ளிட்ட சகல துறைகளிலும் பாரிய குளறுபடிகள் இடம்பெற்று வருவதுடன் குறிப்பிட்ட துறைகளுக்குப் பாரிய அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றன.
இவ்வாறான காரணத்தால் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதற்கான சூழல் அற்றுப்போயுள்ளது. பொலிஸார் தமது கடமையை செய்வதற்கு முடியாதிருக்கின்றனர். இவ்வாறு முழு நாட்டுக்கும் அழுத்தங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்து கொண்டு தான் மீண்டும் அதிகாரத்தைக் கேட்டு அதற்காக போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது இன்றைய அரசாங்கம். அதில் முதலாவதே அமைச்சரவையை 35 ஆகக் குறைக்கப் போவதான வாக்குறுதியாகும்.
இது அரசாங்கத்தினால் கூடுமானதல்ல. அவ்வாறு குறைப்பதனால் அதனை 5ஆம் திகதிக்கு முன்பே செய்து காட்ட வேண்டும். இது நான் ஜனாதிபதிக்கு விடுக்கின்ற சவாலாகும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக