3 ஏப்ரல், 2010

மக்கள் சபை ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகளும் வாழ்வாதார வழிகாட்டல்களும் முன்னெடுக்கப்படும்



மக்கள் சபை ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகளும் வாழ்வாதார வழிகாட்டல்களும் முன்னெடுக்கப்படும். அந்த சபையினூடாக சகல தேவைகளும் நிறைவேற்றப்படுவதன் மூலம் எமது மக்களின் வாழ்வாதாரம் மேம்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வவுனியாவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

வவுனியா நகர சபை மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றிக்காக ஒத்துழைப்பு நல்கிய சகலருக்கும் நான் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இத்தேர்தலில் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் செயற்பட உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் நீண்ட காலம் நீங்கள் அனுபவித்த கஷ்டங்களையும் துன்பங்களையும் நானறிவேன்.

முப்பது வருடகால பயங்கரவாதம் இப்போது முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச மக்கள் இப்போது சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழக் கூடிய சூழல் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. இந்த நாட்டில் நாமெல்லோரும் சகோதரர்களாக வாழ வேண்டும். அற்ப அரசியல் இலாபம் பெறும் நோக்கிலான இனவாத அரசியல் இனியும் வேண்டாம்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேசத்தில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. பயங்கரவாதிகள் உங்களை தவறான பாதையில் இட்டுச் சென்றார்கள். அதனால் தான் மக்கள் இடம்பெயர நேர்ந்தது. இது எமது தாய் நாடு. இங்கு நாமெல்லோரும் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள் போல் வாழ வேண்டும். நாம் சிங்களவர், தமிழர், முஸ்லிம் எனக் கூறி இனவாத அரசியலில் அற்ப இலாபம் பெறும் நோக்கில் இனியும் தொடர வேண்டாம்.

இந்த நாட்டில் வாழும் சகலரையும் பாதுகாக்கும் பொறுப்பு என்னுடையது. அதனை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.

மக்கள் சபை ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகளும் வாழ்வாதார வழிகாட்டல்களும் முன்னெடுக்கப்படும். அந்த சபையில் உங்கள் பிரதேச பிரதிநிதிகள் தான் அங்கம் வகிப்பார்கள். இந்த சபை ஊடாக உங்களது சகல தேவைகளும் நிறைவேற்றப்படும். இதன் மூலம் எமது மக்களின் வாழ்வாதாரம் மென்மேலும் மேம்படும்.

வன்னி பிரதேசத்தில் விவசாயம் செய்யவென சகலருக்கும் நவீன தொழில்நுட்ப வசதியை நாம் பெற்றுக் கொடுப்போம். நவீன முறைப்படி விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கான வசதி வெகுவிரைவில் கிடைக்கும். சகல பட்டதாரிகளுக்கும், படித்த இளைஞர், யுவதிகளுக்கும் தொழில் வழங்கப்படும். நான் எப்போதும் உங்களுடன் தான் இருப்பேன். உங்களை எப்போதும் பாதுகாப்பேன்.

உங்களது பிரதேசத்திற்கு வெகு விரைவில் நீர்ப்பாசன வசதி பெற்றுத் தருவோம். புதிய வீடமைப்பு வசதிகள் உட்பட சகல வசதி, வாய்ப்புக்களையும் நாம் வழங்குவோம்.

புனர்வாழ்வு பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊனமுற்றவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல இன்று தயாராக உள்ளார்கள். பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற 164 இளைஞர், யுவதிகள் தங்களது பெற்றோரிடம் இணையவுள்ளார்கள். புனர்வாழ்வு பெற்ற 148 பல்கலைக்கழக மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் கற்கைகளை மேற்கொள்ளத் தயார்படுத்தப்பட்டிருக்கி ன்றார்கள். கைதடி தங்குமிடங்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளுக்கு மடு பிரதேசத்தில் கணனி பயிற்சிக்கூடம் திறக்கப்பட்டிருக்கின்றது.

நான் ஒரு போதும் பொய் வாக்குறுதி அளிப்பவன் அல்லன். நான் சொல்லுவதை செய்பவன். செய்பவற்றையே சொல்லுபவன். ஐ. தே. கவினர் என்ன செய்தார்கள் என்பதை எல்லோரும் அறிவர். அதேபோல் புலிகள் செய்ததையும் அறிவர். பிழையான வழியில் சென்ற புலிகளின் சிறுவர் படையைச் சேர்ந்த சிலருக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம். சிலர் புலிகளின் கொள்கையை செயற்படுத்தத் தயாராகின்றார்கள்.

இன்று போல் சுதந்திரமாக வாழ வேண்டுமா? இது விடயமாக நீங்கள் நன்கு யோசியுங்கள். உங்களது பிரதேசத்தை மென்மேலும் அபிவிருத்தி செய்யவென எம்மோடு ஒன்றிணையுங்கள். எமது அரசு திறமையானவர்களுக்கு முக்கிய இடமளிக்கின்றது. இதன் பின்னர் இந்த நாட்டில் இனவாத அரசியல் வேண்டாம். சிங்கள, தமிழ், முஸ்லிம் சகலரும் சகோதரர்கள் போன்று ஐ. ம. சு. முன்னணியின் கீழ் இருக்கின்றோம்.

தவறான வழியில் செல்லாதீர்கள், பொய்ப் பிரசாரங்களை நம்பாதீர்கள் வெற்றிலைச் சின்னத்தை மறந்துவிடாதீர்கள் என்றார்கள். அமைச்சர்கள் ரிஷாட் பதியுத்தீன், முன்னாள் எம்.பிக்களான சிவநாதன் கிஷோர், எஸ். கனகரெட்னம், பி. சுமதிபால, மெளலவி மீராசாஹிபு மஃரூப், சட்டத்தரணி உனைஸ் பாரூக், என். கீத்தாஞ்சலி, உபுல் பாலசூரிய, மைக்கல் ஜோசப் பீரிஸ் ஆகியோரும் உரையாற் றினார்கள்.

இக்கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதிகாரியு மான ஏ. எச். எம். அஸ்வர் உட்பட முக்கி யஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக