3 ஏப்ரல், 2010

1365 பேர் ஒப்படைப்பு: பெற்றோருக்கு உதவும் வகையில் பம்பைமடுவில் விசேட கருமபீடம்


புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து கடந்த முதலாம் திகதி தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட 1365 பேரினதும் பெற்றோர் மற்றம் உறவினர்களுக்கு உதவும் வகையில் வவுனியா பம்பைமடுவில் இன்றும் நாளையும் விசேடமாக இரண்டு கருமபீடங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியா பம்பைமடு பெண்கள் விடுதி மற்றும் பம்பைமடு தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இரு இடங்களிலுமே இவ் விசேட கருமபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் இயங்கவுள்ள இக் கருமபீடங்களுக்கென தனித்தனி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள் கலந்துகொள்வரெனவும் அவர் கூறினார்.

குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் ஒவ்வொருவருக்கும் தமது தேவைகளை இலகுவாக்கும் வகையில் கையேடுகள் அடங்கப்பெற்ற கோப்பும் அவர்கள் முழுமையான புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் ஏனைய பிரஜைகளைப் போல் வாழ தகுதி பெற்றவர்கள் என்பதற்கான சான்றிதழும் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வழங்கப்படும் கோப்பில் மருத்துவர்களால் பரித்துரைக்கப்பட்ட மருந்துகள், சிகிச்சை முறைகள், கலந்தாலோசிக்கப்பட வேண்டிய வைத்திய நிபுணர்கள் பற்றிய அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன. இதனடிப்படையில் இவர்கள் நாட்டின் எந்தவொரு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக