22 மார்ச், 2010

தொடரும் சுதந்திர ஊடகங்களிற்கு எதிரான தாக்குதல்.



கொழும்பு, கொம்பனித் தெரு பிறேபுரூக் பிளேசிலுள்ள மகாராஜா நிறுவனத்தின் சிரச வலையமைப்பு (சக்தி தொலைக்காட்சி) தலைமை அலுவலகம் மீது சற்று முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கங்காராமை பக்கமிருந்து வந்த 100 பேர் கொண்ட பிரதி அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் கற்களை வீசி இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ஓர் கட்சி ஆதரவாளர்கள் எனப்படும் குண்டர்களால் வீசப்பட்ட கற்களால் அலுவலகக் கண்ணாடிகள், சொத்துக்கள் மட்டுமன்றி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளதுடன், சக்தி நிறுவன ஊழியர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.



அதேநேரம் தற்பாதுகாப்புக் கருதி சக்தி நிறுவன பாதுகாப்பு ஊழியர்கள் அதே கற்களினால் பதில் தாக்குதலொன்றை குண்டர்களை நோக்கி நடத்தியுள்ளனர்.


தாக்குதலை நடத்தியோரின் பின்னணியில் சண்டித்தனத்துக்குப்பெயர்போன பிரதி அமைச்சர் ஒருவர் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தற்போது அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் இதுவரை 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலீஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிரச தொலைக்கட்சி அலுவலகத்தில் சம்பவம் நடைபெற்ற சமயம் 250 பேர்வரை கடமையில் ஈடுபட்டிருந்ததாக அவ்வலையமைப்பு மேலும் தெரிவித்தது.



மகாராஜா நிறுவனம் 3 வானொலி நிலையங்களையும், 3 டெலிவிஷன் நிலையங்களையும் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கடந்த ஆண்டு ஜனவரி மாதமும் இவர்களின் ஓர் ஒலிபரப்பு நிலையம் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் இதுவரை ஒருவரும் கைது செய்யப்ப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



தாக்குதல் நடத்தியவர்கள் இந்நிறுவனத்தார் கடந்த வருடம் அரசாங்கத்தினால் முடக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற கோஷத்துடனேயே தாக்குதல் நடத்தியதாக அறியப்படும் நிலையில், இத் தாக்குதல் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை ஒட்டி நடைபெற்ற நிலையில், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் ஊடகவியலாளர்கள் காணமல் போனமை, ஊடகங்க தடை செய்யப்படமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக