22 மார்ச், 2010

புது ரக பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!



கப்பலில் இருந்து செங்குத்தாகச் சீறிச் சென்று எதிரி நாட்டு கப்பலை தாக்கி அழிக்கவல்ல சூப்பர்சானிக் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது.

ஒரிசாவின் வங்கக் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சரியாக காலை 11.30 மணி அளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதை அடுத்து உலகிலேயே சூப்பர்சானிக் ஏவுகணையை (ஒலி வேகத்தைவிட அதிகமாகச் செல்லும்) தம் வசம் வைத்துள்ள ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சமீபத்தில் இந்தியா நடத்திய வான் பகுதி பாதுகாப்பு ஏவுகணை (ஏஏடி) சோதனை தோல்வியைத் தழுவியது. இது ஏவுகணை விஞ்ஞானிகள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதால் அவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக சோதிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை ரகங்கள் அனைத்தும் கிடைமட்டமாகச் சீறிச் சென்று எதிரி நாட்டு இலக்குகளை தாக்கவல்லவை. ஆனால் இந்த ஏவுகணை செங்குத்துப் பாதையில் சீறிச் சென்று எதிரி நாட்டு இலக்கை தாக்கவல்லது.

290 கிலோ மீட்டர் தொலைவு வரை சீறிச் சென்று தாக்கவல்ல இந்த ஏவுகணை, கப்பற்படை கப்பலான ரன்வீரில் இருந்து ஏவப்பட்டது. சீறிச் சென்ற இந்த ஏவுகணை இலக்காக நிர்ணயிக்கப்பட்ட கப்பலை நேர்த்தியாகத் தாக்கி முழுமையாக அழித்தது என்று பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தலைவர் சிவதாணு பிள்ளை தெரிவித்தார்.

பிரதிபா பாட்டீல், ஏ.கே.அந்தோனி வாழ்த்து: சூப்பர்சானிக் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக