22 மார்ச், 2010

ஐ. ம. சு. முன்னணி நாடளாவிய ரீதியில் இதுவரை 10 ஆயிரம் பிரசாரக் கூட்டங்கள்






ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இதுவரை பிரதான பிரசாரக் கூட்டங்கள் அடங்கலாக 10 ஆயிரம் கூட்டங்களை நாடளாவிய ரீதியில் நடத்தியுள்ளது. எதிர்த்தரப்பில் எதுவித போட்டி இல்லாத போதும் சிறப்பாக பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் டளஸ் அழஹப்பெரும கூறினார். ஐ.ம.சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (22) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி தலைமையில் நாடுபூராவும் 26 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதோடு இதுவரை 6 கூட்டங்கள் நிறைவடைந்து ள்ளன. இதுதவிர கட்சித் தலைவர்கள் தலைமையிலான 12 பிரதான கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. வீட்டு மட்டத்தில் 30 ஆயிரம் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு இதுவரை 7 ஆயிரத்திற்கும் அதிகமான கூட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளன. வாக்குச்சாவடி மட்டத்தில் 3 ஆயிரம் கூட்டங்கள் நடந்துள்ளன. வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யும் நடவடிக்கை கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது. 65 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எமக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எந்த சக்திக்கும் தலைசாய்க்காத பலமான பாராளுமன்றத்தை வழங்குமாறே ஜனாதிபதி கோரியுள்ளார்.

நடந்து முடிந்த வடக்கு தவிர்ந்த 7 மாகாண சபைகளுக்குமான தேர்தலின்படி எமக்கு பாராளுமன்றத்தில் 143 ஆசனங்கள் கிடைக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலின் பிரகாரம் 133 ஆசனங்கள் கிடைக்கும். ஆனால் கடந்த தேர்தல்களை விட இன்று ஐ.ம.சு.முன்னணி பலமான நிலையில் உள்ளது.

எதிர்க்கட்சி மதங்களைப் பயன்படுத்தி அரசியல் செய்ய முயற்சிக்கின்றன.

மீன்குடியேற்றம் குறித்து பேசிய அவர் வடக்கு, கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்போவதாக ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. ஆனால் இன்று கிழக்கில் மீள் குடியேற்றங்கள் பூர்த்தியடைந்துள்ளன. ஆனால் அங்கு வெளியாட்கள் ஒருவர் கூட மீள்குடியேற்றப்படவில்லை என்றார்.

பொன்சேகா குறித்து பேசிய அமைச்சர் ஏனையவர்களுக்கு இல்லாத சலுகைகள் வசதிகள் என்பன பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை அவர் துஷ்பிரயோகம் செய்து வருகிறார். அவருக்கு குளிரூட்டப்பட்ட அறை வழங்கப்படவேண்டுமென அவரின் மனைவி கூறியிருந்தார். குண்டுத் தாக்குதலினால் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு பொன்சேகாவுக்கு குளிரூட்டப்பட்ட அறையில் இருக்குமாறே மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளதாக அனோமா தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தல் கூட்டங்களில் பேசிய பொன்சேகா தான் குளிரூட்டப்பட்ட அறைகளில் இன்றி வெய்யிலில் இருந்தே யுத்தம் செய்ததாக கூறியிருந்தார் என்றார்.

ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ரகசிய ஒப்பந்தம் எதுவும் செய்யவில்லை என ஐ.தே.க.வும் ஜே.வி.பியும் கூறிவந்தன. ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கை இணைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரகசிய ஒப்பந்தம் இருந்தது உறுதியாகிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக