18 மார்ச், 2010

2வது இராணுவ நீதிமன்றத்தில் பொன்சேகா நேற்று ஆஜர்




விசாரணை மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பு
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தனது சட்டத்தரணிகள் சகிதம் இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் முன் நேற்று ஆஜரானதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

கடற்படைத் தலைமையகத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற இரண்டாவது நீதிமன்றம் அதன் அமர்வுகளை மறு அறிவித்தல் வரை ஒத்திவைத்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவிக்கின்றது.

சரத் பொன்சேகா இராணுவத்தில் இருந்தபோது மேற்கொண்ட இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறிய சம்பவம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக இந்த இரண்டாவது நீதிமன்றம் நியமிக்கப்பட்டிருந்தது.

நேற்று நடைபெற்ற இரண்டாவது இராணுவ நீதிமன்றம் தொடர்பாக இராணுவத் தலைமையகம் மேலும் தகவல் தருகையில்:-

நேற்றைய நீதிமன்றம் கூடியபோது ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த இராணு நீதிமன்றத்தின் நியமனம் குறித்து ஆட்சேபனைகளை முன்வைத்தனர்.

ஒரு இராணுவ நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் சம காலத்தில் இன்னொரு இராணுவ நீதிமன்றத்தில் உறுப்பினர்களாகவும் பணி புரியலாமென இராணுவ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தாலும், எதிர்த் தரப்பு சட்டத்தரணிகள் வித்தியாசமான வாதங்களை முன்வைத்தனர். இதனையடுத்து இராணுவ நீதிமன்ற விசாரணைகள் அதி உயர் வெளிப்படை தன்மையையும், நியாயமும் கொண்டதாகவும் இருக்க வேண்டுமென்பதைக் கருத்திற்கொண்டு இந்த நீதிமன்றத்தை நியமித்த அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு செல்வதென நீதிமன்றம் ஏகமனதாகத் தீர்மானித்ததையடுத்து விசாரணை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது நீதிமன்றின் அமர்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக