18 மார்ச், 2010

ஆதிக்கம் நிறைந்த நாடாகும் இந்தியா: அமெரிக்கா கணிப்பு





'இந்தியப் பெருங்கடலின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது மற்றும் கவுரவமிக்க ராணுவ பாரம்பரியம் ஆகியவற்றால், இந்தியா, அடுத்த 25 ஆண்டுகளில், தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் ஆதிக்கம் நிறைந்த நாடாக திகழும்' என, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கூட்டுப் படை, நாடுகளின் எதிர்கால ராணுவ செயல்பாடு மற்றும் அவர்களின் தொழில்நுட்ப பாணி குறித்து, சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய ராணுவத்தின் தரம், வரும் காலங்களில் மேம்படுத்தப்படும். இந்தியப் பெருங்கடலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருப்பது மற்றும் மதிப்பு மிக்க ராணுவ பாரம்பரியத்தால், அந்நாடு, அடுத்த 25 ஆண்டுகளில், தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் ஆதிக்கம் நிறைந்த நாடாக திகழும்.இந்தியாவின் வளம் அடுத்த 20 ஆண்டுகளில் நான்கு மடங்காக அதிகரிக்கலாம்.

எனினும், அந்நாட்டு மக்கள் தொகையில் அதிகளவு, வரும் 2030ம் ஆண்டு வறுமையிலேயே இருப்பர். இதனால், ஏழை மற்றும் பணக்காரர்கள் இடையேயான பிரச்னைகள் அதிகரிக்கும்.இப்பிரச்னை நாட்டில் காணப்படும் மதங்கள் மற்றும் இனத்தில் பிரிவினையை உண்டாக்கி, அதனால், பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்.

ரஷ்யா மற்றும் இந்தியா இருநாடுகளின் வளர்ச்சி அதிகரிக்கும். எனினும், ஜனநாயகத்திற்கு சாதகமற்ற பாணிகளை கடைபிடிப்பது மற்றும் அழிந்து வரும் உள்கட்டமைப்பை மீண்டும் சீரமைக்க, தீவிர முதலீடு செய்யாதது ஆகியவற்றால், ரஷ்யாவின் வளர்ச்சி வலுவற்றதாக இருக்கும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக