12 மார்ச், 2010

ஐ.தே.க. பதத்துக்கு உண்மையான அர்த்தம் உணர்த்தப்பட்டுள்ளது:சமல் பிரசன்ன

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இன்று பலரும் இணைந்துள்ளனர்.ஐக்கிய தேசியக் கட்சி என்ற பதத்துக்கு உண்மையான அர்த்தம் தற்போது உணர்த்தப்பட்டுள்ளது.எனவே இம்முறை அனைவரது ஒத்துழைப்புடனும் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பது உறுதி என வடமேல் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சமல் பிரசன்ன செனரத் தெரிவித்தார்.

குருணாகல் வடமேல் மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் பணிமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"உலகின் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் 1977 இல் பொதுத்தேர்தல் நடத்திய காலப்பகுதியிலும் மனித உரிமைகள் மீறப்பட்டன.ஆனால் அந்தப் பொதுத்தேர்தலில் ஐ.தே.க மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

இன்று ஆளும் அரச தப்பினருக்கு மக்கள் முன் சென்று வாக்குக் கேட்க முடியாது.மக்களின் கல்வி,சுகாதாரம், பொருளாதாரம், தொழிற் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்படவில்லை. இதுகாலவரை யுத்தம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி தேர்தல்களில் வெற்றி பெற்ற இந்த அரசாங்கம், இம்முறை யதார்த்தபூர்வமான மக்களின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து தேர்தலைச் சந்திக்க வேண்டியுள்ள போதிலும் அது அவர்களால் முடியாதுள்ளது.

ஆறுமுகன் தொண்டமானைச் சுற்றி இருந்தவர்கள் எம்முடன் இணைந்துவிட்டனர்.அவர் தனித்து உள்ளார்.இம்முறை நுவரெலியா மக்கள் அவரை நிராகரிப்பர். அவரின் தோல்வி உறுதியாகிவிட்டது.

மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எதற்கு?இன்று மாகாணசபை வெறும் அரச நிறுவனமாகவே உள்ளது.அபிவிருத்தி செய்கிறோம் என ஊடகங்களில் பொய்ப்பிரசாரங்களே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குடும்ப ஆதிக்கத்தை அதிகரிக்கவே மூன்றில் இரண்டு கோருகின்றனர்.

பொலிஸார் ஸ்ரீ லங்கா பொலிஸ் என்பதை மறந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொலிஸார் என்றே செயற்பட்டு வருகின்றனர்.பொலிஸார் முன்னிலையில் 'கட் அவுட்'கள் வைக்கப்பட்டும் அவற்றை அவர்கள் அகற்றுவதில்லை. பொலிஸ் இன்று அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. மக்களை இறைவனே காப்பாற்ற வேண்டும்.ஸ்ரீ.ல.சு.க. இணை அலுவலகங்களாகவே பொலிஸ் நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன.

இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்களில் அரச குண்டர்கள் திரிந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.ஏனைய கட்சிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மாகாணசபைகள் மூலம் ஒதுக்கிய பணம் இன்றும் எமக்கு வந்து சேரவில்லை.

இம்முறை மூவின மக்களும் இணைந்துள்ளனர்.முஸ்லிம், தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஐ.தே.மு. அரசில் உருவாகும்" எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக