28 டிசம்பர், 2010

யாழ். வலிகாமம் பிரதி கல்வி பணிப்பாளர் சுட்டுக் கொலை மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் சுட்டுவிட்டு தப்பியோட்டம்


வலிகாமம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் 11.30 மணியளவில் உரும்பிராய் மேற்கு பகுதியில் நடைபெற்றதாக பொலிஸார் கூறினர்.

வீட்டுக்கு கொள்ளையிட வந்த ஆயுதக் குழுவே இவரை கொலை செய்து விட்டுத் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வலிகாமம் பிரதிக் கல்விப் பணிப்பாளரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் இனந்தெரியாத ஆயுதக் குழுவொன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட வந்துள்ளது. வீட்டிலுள்ளவர்களின் நகைகளை தருமாறு ஆயுத முனையில் அச்சுறுத்திய கும்பல் நகைகளை கொள்ளையிட்டுள்ளது.

பிரதிக் கல்விப் பணிப்பாளரின் மகள் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்ற சந்தேக நபர்கள், அவருடன் தவறாக நடக்க முயன்றதாக அறிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர் மகளின் அருகில் வந்து இதனை தடுக்க முயன்ற போது சந்தேக நபர்கள் அவரைச் சுட்டு விட்டு தப்பியோடியுள்ளனர். சுடப்பட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்கண்டு சிவலிங்கம் (52) யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின் இறந்ததாக பொலிஸார் கூறினர்.

இறந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த வீட்டில் இருந்து 9 மி.மி. வெற்று ரவையொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மதேவவின் பணிப்புரையின் பேரில் கோப்பாய் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடத்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இருவர் தலைமையில் விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட் டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேமாதிரியான சம்பவம் ஒன்று இரண்டு வாரத்துக்கு முன்பு சங்காணையில் இடம்பெற்றது. இதன் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஆலயக் குருக்களுக்கு சிகிச்சைபலனளிக்காமல், நான்கு தினங்களில் மரணமானார். இவ்விரு சம்பவங்களும் யாழப்பாண மக்களிடம் அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங் களை உடன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரு மாறு யாழ். மாவட்ட பாதுகாப்பு அதி காரிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் அவசர பணிப்புரைகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக