28 டிசம்பர், 2010

வடகொரியாவின் அணு ஆயுதம் தொடர்பாக தகவல் அறிய முயன்ற தென் கொரிய இராணுவ அதிகாரி சீனரினால் கைது




சீன இராணுவ அதிகாரிக்கு இலஞ்சம் கொடுத்து வட கொரியாவின் அணு ஆயுதம், ஏவுகணை தயாரிப்பு ஆகியன தொடர்பான தகவல்களை பெற முயன்ற தென் கொரிய இராணுவ அதிகாரியை சீனா கைது செய்து சிறையில் வைத்துள்ளது.

வட கொரிய அரசின் அதிகாரபூர்வ நாளிதழான யானோப் செய்தி நிறுவனமும், தென் கொரியாவின் ஜூங் ஆங் நாளிதழும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

தென் கொரிய இராணுவத்தின் இடை நிலை தளபதியாக பணியாற்றிவரும் சோ என்பவர், சீன நாட்டின் ஷெங்கியாங் நகருக்கு வந்திருந்தபோது, சீன இராணுவ அதிகாரி ஒருவரிடம் வட கொரியாவின் அணு ஆயுதம், ஏவுகணைகள் தொடர்பான இரகசியங்களைப் பெறுவதற்கு இலஞ்சம் தர முற்பட்டபோது, அவரை கண்காணித்து வந்த சீன உளவுப் பிரிவினர் கைது செய்ததாக அச்செய்திகள் கூறுகின்றன. வட கொரியாவின் ஆயுத அமைப்புகள் குறித்து தென் கொரியா உளவறிய முற்படுவதை தடுப்பதில் சீனா மிக அதிகமான கவனம் செலுத்தி வருகிறது என்பதையே இந்நடவடிக்கை உறுதி செய்கிறது என்றும், வட கொரியா தொடர்பாக உளவில் ஈடுபட்ட மேலும் ஒரு தென் கொரிய உளவாளி சீனாவின் பிடியில் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சோ என்கிற அந்த தென் கொரிய இராணுவ மேஜர் கடந்த 14 மாதங்களாக சீன சிறையில் உள்ளதாக அச்செய்திகள் கூறுகின்றன.

அதே நேரத்தில் வட கொரியாவின் அணு ஆயுத நிலைகளை அறிந்துகொள்வதில் தென் கொரிய அதீத கவனம் செலுத்தி வருவது, அந்த இலக்குகளை துல்லியமான தாக்குதல் நடத்தி அழிக்கும் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கே என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக