28 டிசம்பர், 2010

தனியார் வகுப்புக்களால் மாணவருக்கு ஏற்படும் பாதிப்பை ஆராய குழு தேசிய கல்வி ஆணைக்குழு பரிந்துரை


தனியார் வகுப்புகளின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென தேசிய கல்வி ஆணைக்குழு பரிந்துரை செய்து ள்ளது.

தேசிய கல்வி ஆணைக்குழு 15 மாவட்டங்களில் முன்னெடுத்த ஆய்வுகளையடுத்தே இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய குழுவில் மாகாண கல்வி அலுவலகம், தேசிய கல்வி நிறுவனம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை என்பன உள்ளடக்கப்படவேண்டும் எனவும் தேசிய கல்வி ஆணைக்குழு குறிப்பிட்டு ள்ளது.

10ஆம் ஆண்டு மாணவர்களில் 91.84 வீதமானவர்களும் 12ம் ஆண்டு மாணவர்களில் 98 வீதமானவர்களும் உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் நூறு வீதமானவர்களும் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக தேசிய கல்வி ஆணைக்குழுவின் ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

10ஆம் ஆண்டில் கற்கும் மாணவர்களிடையே பாடசாலை பற்றிய நம்பிக்கை இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறைபெறுவது, பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாமை என்பனவே மாணவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதற்கு பிரதான காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போட்டி நிறைந்த உயர்தர வகுப்புகளுக்கு முகம்கொடுப்பதற்கு மேலதிக வகுப்புகளினூடாக வெற்றிகரமாக தயார்படுத்துவதோடு சிறப்பாக கற்பிப்பதாக சாதகமான விடயமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

10,000 ரூபா முதல் 20,000 ரூபா வருமானம் பெறும் குடும்பங்கள் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களு க்காகவே கூடுதலாக செலவிடுகின்றனர். 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தரப் பரீட்சை வகுப்புகளுக்காகவும் அதிகம் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடத்திட்டத்தில் விடயதானம் அதிகமாக உள்ளதால் மேலதிக வகுப்புகளுக்கு செல்வது கட்டாயம் எனவும் மேலதிக வகுப்பு மூலம் பிரதான பரீட்சைகளில் கூடுதலான மாணவர்கள் சித்தியடைவதாகவும் மேலதிக வகுப்புகளின் மூலம் அழுத்தம் வழங்கப்படுகிறது என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில், பாடசாலை மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்கு செல்வது தொடர்பில் மாற்றுக் கொள்கைத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் இன்று பரீட்சைத் திணைக்களத்தில் மாநாடொன்று நடத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக