15 டிசம்பர், 2010

மக்களைப் பாதிக்காத விதத்தில் ஜனவரியில் மின் கட்டண மாற்றம்


பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலே ஜனவரி முதலாம் திகதியில் இருந்து மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படுவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க நேற்று கூறினார்.

பொதுமக்களின் கருத்தை பெற்றே மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக கூறிய அவர் இது தொடர்பாக மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு முன்னிலையில் இன்று (15ம் திகதி) தமது கருத்துக்களை முன்வைக்க அவகாசம் வழங்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மின் கட்டண திருத்தம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

மின்சார சபை ஈட்டி வரும் பாரிய நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்க வரவு செலவுத் திட்டத்தினூடாக யோசனை முன்வைக்கப்பட்டது. 90 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பாவிக்கும் பாவனையாளர்களுக்கே மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. 45 இலட்சம் மின் பாவனையாளர்களில் 78 வீதமானவர்கள் 90 அலகுகளுக்கு குறைவாகவே மின்சாரம் பாவிக்கின்றனர்.

எனவே, சாதாரண மக்கள் மின் கட்டண உயர்வினால் பாதிக்கப்பட மாட்டார்கள். குளிரூட்டி, குளிர்சாதனப்பெட்டி போன்ற சொகுசு சாதனங்கள் பாவிப்போருக்கான கட்டணமே உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மத ஸ்தலங்கள், அரச நிறுவனங்கள், பாடசாலைகள் என்பவற்றுக்கான கட்டணம் 25 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண திருத்தப்படி 91 – 120 அலகு வரை ஒரு அலகுக்கு 16 ரூபாவில் இருந்து 23.50 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது. நிலையான கட்டணம்180 ரூபாவில் இருந்து 300 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 121 – 150 அலகு வரையான கட்டணம் 28.60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு அலகு மின்சாரம் உற்பத்தி செய்ய 17.51 ரூபா செலவாகின்ற போதும் 13.10 ரூபாவிற்கே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என சிலர் கூறுகின்றனர்.

நாளாந்தம் 10 ஆயிரம் மில்லியன் கிலோ வோர்ட் மின்சாரம் தேவைப்படுகிறது- ஆனால் நீர் மின் மூலம் 45 வீதம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். மொத்த தேவையில் 55 வீதம் எரிபொருள் மூலமே உற்பத்தி செய்யப்படுகின்றது. சில இயந்திரங்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு 46 ரூபா வரை செலவாகிறது.

மின்சார சபை கடந்த 9 வருடத்தில் 15 பில்லியன் ரூபா நஷ்டம் ஈட்டியுள்ளது. இந்த நிலையிலே சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

புதிய விதிமுறைகளின் படி பாவனையாளரிடமிருந்து சாதாரண கட்டணமே அறவிட முடியும். மின்சார சபை செலவை மக்கள் மீது சுமத்த முடியாது. கட்டண அதிகரிப்பு தொடர்பில் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு இன்று கொழும்பு மன்றக் கல்லூரியில் நடத்தும் கூட்டத்தில் மக்களுக்கு தமது அபிப்பிராயங்களை முன்வைக்கலாம். இதனையும் கருத்திற்கொண்டு கட்டண உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஜுலை மாதத்தில் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும். மின்சார சபை இலாபமீட்டினால் அதன் பலன் பாவனையாளருக்கே வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக