15 டிசம்பர், 2010

மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்கு ஜனாதிபதியினால் கெளரவம்



புலிகளுக்கு எதிராக வடக்கு, கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட படையினரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகைக்கு அழைத்து அவர்களுக்குப் பதக்கம் அணிவித்து கெளரவித்தார்.

புலிகளுக்கு எதிராக வடக்கு, கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளில் 4,80,606 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 1,72,891 பேர் களமுனையில் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டவர்களாவர்.

இதற்கான நிகழ்வு நேற்று ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் ஆயிரம் படையினருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது.

பிரதமர் டி. எம். ஜயரத்ன, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்நிகழ்வின் போது பதக்கங்களை அணிவித்தனர்.

இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி திசர சமரசிங்க, விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக்க, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதக்கம் வழங்கி கெளரவித்தார்.

அதனையடுத்து வடக்கு கிழக்கு மாகாண மனிதாபிமான நடவடிக்கைகளுக்குத் தலைமைத்துவம் வழங்கி வழிநடத்திய மேஜர் ஜெனரல்கள் ஆர். எம். டி. ரத்நாயக்க, சி. பி. கால்லகே, ஜி. டி. குணரத்ன, கேர்ணல் ஏ. டி. குணவர்தன, பிரிகேடியர் எஸ். டி. டி. லியனகே உட்பட உயர்மட்ட அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பதக்கங்களை அணிவித்துக் கெளரவித்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் டி. எம். ஜயரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்குப் பதக்கங்களை அணிவித்து கெளரவித்தனர்.

கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கையில் 1,97,796 படை வீரர்கள் ஈடுபட்டனர். இவர்களில் 42,000 பேர் களமுனையில் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டவர்களாவர்.

அதேபோன்று வடக்கில் 2,82, 830 படை வீரர்கள் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவர்களில் 1,30,891 பேர் களமுனையில் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டவர்களாவர். இவர்கள் அனைவருக்குமே பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக