15 டிசம்பர், 2010

ஜனாதிபதியினாலேயே உறுதியான தீர்வை முன்வைக்க முடியும்


பெரும்பான்மை இன மக்களின் அதிகப்படியான ஆதரவைப் பெற்று நாட்டின் தலைவராக விளங்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தான் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை உறுதியாக முன்வைக்க முடியும். இது தொடர்பாக ஜனாதிபதி மீது சிறுபான்மை இன மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஏறாவூரில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத்;

கடந்த காலங்களில் நடைபெற்ற எந்தவொரு தேர்தலிலும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காத முஸ்லிம் காங்கிரஸ் தற்போது அரசாங்கத்துடன் இணைந்துள்ளது. அதுமாத்திரமன்றி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு அடுத்த படியாக இரண்டாவது தனிக்கட்சியாகவும் முஸ்லிம் காங்கிரஸ் திகழ்ந்து வருகின்றது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு நடுநிலைப் போக்கைக் கையாண்டு வருகின்றது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்ல அரசியல் வெளிப்படுத்துகையைக் காட்டுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள அதேவேளை கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நேரடிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்போது அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து அரசியல் தீர்வுக்காகவும், வடக்கு கிழக்கு மாகாண புனர்வாழ்வுக்காகவும் அமைக்கவுள்ள குழுக்களில் முஸ்லிம் காங்கிரஸணும் இணைக்கப்பட வேண்டும் என்று தமது கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையின் போது முஸ்லிம் மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் காங்கிரஸணும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் ஒன்றாகச் செயற்பட்டு ஒரு பக்குவப்பட்ட அரசியல் போக்கினை வெளிப்படுத்த வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். இவ்வாறு செயற்படும் போதுதான் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையில் முஸ்லிம் மக்களுக்கான அபிவிருத்தி உட்பட ஏனைய தன்மைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சுப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தனது சொந்த ஊரான ஏறாவூருக்கு வருகை தந்த பிரதி அமைச்சருக்கு ஏறாவூர் நகர பிரதேச சபைக்கு முன்னால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு பட்டாசு வேட்டுக்களுடன் ஊர்வலமாக முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் வரை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஜம்இய்யத்துல் உலமா சபையினர் ஏற்பாடு செய்திருந்த விசேட கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் மர்ஹணூம் நூர்தீன் மசூரின் ஆத்ம ஈடேற்றத்திற்காக பிரார்த்தனை இடம்பெற்றது. ஏறாவூர் ஜய்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் மெளலவி ஏ. சி. ஏ. மஜீத் தலைமையில் இங்கு நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர் எம். எல். அப்துல் லத்தீப், மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக