15 டிசம்பர், 2010

தேசிய கீதத்தை இதுவரை தமிழில் பாடியமை சட்டத்தை மீறிய செயல்:ஹெல உறுமய




அரச வைபவங்களில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுவதில்லை. எனவே, இதுவரை காலமும் தமிழ்ப் பாடசாலைகளில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளமை நாட்டின் சட்டத்தை மீறிய செயலாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார். தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியாவின் தேசிய கீதம் ஹிந்தியில் இசைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விடுத்து எமது நாட்டில் தலையிடுவது அநக்ஷிகரீகமான செயலாகுமென்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒரு நாட்டின் பெரும்பான்மை தேசிய இனத்தின் மொழியிலேயே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். அதற்கமைய எமது நாட்டில் சிங்களத்திலேயே இசைக்கப்பட வேண்டும். தமிழில் இசைப்பதை அனுமதிக்க முடியாது.

அவ்வாறெனில் எதிர்காலத்தில் ஆங்கிலத்திலும் இசைக்கப்பட வேண்டுமென கேட்பார்கள். இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர்களது தேசிய மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.

அரச வைபவங்களில் தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்படும் போது தமிழ் பாடசாலைகளில் இதுவரை காலமும் தமிழில் இசைக்கப்பட்டமை சட்டவிரோதமாகும். இதனை உடனடியாக தடை செய்ய வேண்டும். நாம் இந்தியாவின் காலனித்துவ நாடல்ல. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தனது வேலையை பார்க்க வேண்டும். அதைவிடுத்து எமது தேசிய கீதம் தொடர்பில் கருத்து கூறியிருப்பது அநாகரீகமான செயலாகும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக