27 நவம்பர், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு-

26.11.2010.
கட்சிகளின் அரங்கம் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த சந்திப்பு ஏறக்குறைய இரண்டரை மணிநேரங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன், அவரது செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். தமிழ்க் கட்சி அரங்கத்தின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், செயலாளர் சு.சதானந்தம், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், சிறீரெலோ தலைவர் உதயராஜா, சுரேந்திரன், பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலர் ரி.சிறிதரன், குமார், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு, நாளாந்தப் பிரச்சினைகளான இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் விடுதலை என்பன தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எடுத்துக் கூறினர். சிலவற்றுக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்கியபோதிலும், பலவற்றுக்கு அப்பிரச்சினைகளைப் கவனிப்பதற்காக தமிழ்க் கட்சிகளின் அங்கத்தவர்களைக் கொண்ட குழுவொன்றை தான் அமைக்கவுள்ளதாகவும், அந்தக் குழுவானது மேற்படி விடயங்களை ஆராய்ந்து தீர்வுகளை அளிக்குமென்றும் தெரிவித்துள்ளார். இதன்போது தமிழ் மக்களுக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு அதில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. இதேவேளை தமிழ்க் கட்சிகளின் அரங்கின் இச்சந்திப்பு முதலாவது சந்திப்பு என்ற ரீதியில் ஒரு நல்ல ஆரம்பமாக பார்க்கப்படுகிறது என்று அரங்கின் பேச்சாளர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக